Saturday, 20 January 2018

தொழிலாளர் நல அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடம்
தோழர்கள்.மதிவாணன்  - ஆசிக் அகமது ஆகியோர்
கோரிக்கை மனு அளிக்கும் காட்சி 

அடிமட்ட மக்களுக்கு செய்யும் தொண்டே…
ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றார் சுவாமி விவேகானந்தர்...

அந்த வழியில்…
அடிமட்ட ஊழியர்களாகிய ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில்…
அல்லல் அகற்றி… ஆதங்கம் போக்கி…. இன்னல் நீக்கி…
அமைதி வழியில் அவர்களது  வாழ்வில் ஒளியேற்றும் பணியில்…
அல்லும் பகலும் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டு வருகிறது… வளருகிறது… NFTCL பேரியக்கம்…

அல்லல்படும் ஒப்பந்த ஊழியர்களின் ஓயாத பிரச்சினைகளை…
அகில இந்தியத்தலைவர் தோழர்.ஆசிக் அகமது அவர்களும்…
அகில இந்தியப் பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்களும்…

அன்புள்ளம் கொண்ட தொழிலாளர் நல 
அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடமும்...
முதன்மைத்தொழிலாளர் ஆணையர்
திரு.அனில்குமார் நாயக் அவர்களிடமும்…
19/01/2018 அன்று தலைநகர் டெல்லியில் சந்தித்து
விரிவாக எடுத்துரைத்துள்ளனர்…

உரிய தேதியில் சம்பளம் இல்லை…
உழைப்புக்கேற்ற ஊதிய இல்லை…
அடையாள அட்டை இல்லை…
ஆண்டுதோறும்  போனஸ் இல்லை…
மருத்துவ வசதி இல்லை…
மரித்து விட்டால் இழப்பீடில்லை…
வாரத்தில் ஓய்வில்லை….
வைப்புநிதியில் நிறைவில்லை….
மொத்தத்தில் மனிதநேயம் என்பதே  BSNLலில் இல்லை…
என்பதை நமது தலைவர்கள் நேர்பட எடுத்துரைத்து…
எழுத்துப்பூர்வ கடிதமும் கொடுத்துள்ளனர்….

அதோடு நில்லாமல்…
மூன்று மாத சம்பளம் இல்லாமல் தன்
மூச்சை நிறுத்திக்கொண்டான் ஒரு தோழன் என
தமிழகத்தின் கடைக்கோடியில்….நடந்த கொடுமையை
அமைச்சரிடம்...ஆணையரிடம் எடுத்துரைத்துள்ளனர்….

ஆவண செய்வதாக அமைச்சரும்…
ஆணையரும் உறுதி அளித்துள்ளனர்….

அமைச்சரைச் சந்தித்து… 
நிரந்தர ஊழியர்களின் பிரச்சினையை...
எடுத்து இயம்ப இயலாத இந்நேரத்தில்…

அடிமட்ட ஊழியர்களின் பிரச்சினைக்காக..
அமைச்சரைச் சந்தித்து குறைகளை எடுத்துக்கூறியது…
அடிமட்ட ஊழியர்களின் தொழிற்சங்க வரலாற்றில் 
அற்புதம் மிகுந்த செயலாகும்...

எனவேதான்...
NFTCL பேரியக்கம்...
நாடு முழுக்க வளருகின்றது…
நாள் முழுக்க வளருகின்றது…

இதோ வங்கத்திலும் வளர ஆரம்பித்துள்ளது…
மூவாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள்..
NFTCL இயக்கத்தில் இணைந்திட இசைந்துள்ளனர்….
வங்கத்தில் விரைவில் வலுவான இயக்கம் துவங்கப்படும்….

அடிமட்ட ஊழியர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய
அருமைத்தலைவர்கள் குப்தா… சந்திரசேகர்… ஜெகன் வழியில்…
அனுதினமும்...
NFTCL நடைபோடும்… நலம் சேர்க்கும்…
வாழ்க NFTCL… வளர்க NFTCL…

Tuesday, 16 January 2018

சஞ்சார் பவன் பேரணி

BSNL அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள் சங்கங்கள்
 ---------------------------------------------------------------------------------------
தொலைத்தொடர்பு தலைமையகம்
சஞ்சார் பவன்  நோக்கி
மாபெரும் கோரிக்கைப் பேரணி

23/02/2018 – வெள்ளிக்கிழமை - டெல்லி
  --------------------------------------------------------------------------------------
 கோரிக்கைகள் 

மத்திய அரசே…
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு
ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து…

01/01/2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து…

இரண்டாவது ஊதியமாற்ற இழப்புகளை சரி செய்…

விருப்ப ஓய்வுத்திட்டத்தை திணிக்காதே…

ஓய்வு பெறும் வயதைக் குறைக்காதே… 

செல்கோபுரங்களைப் பிரித்து தனி நிறுவனம் உருவாக்காதே..

Saturday, 13 January 2018

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

இழந்தது போதும்…
இன்பம் பொங்கட்டும்…

பொறுத்தது போதும்…
பொறுமை பொங்கட்டும்…

அனைவருக்கும்
இனிய தமிழர் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்

Thursday, 11 January 2018

4G  அலைக்கற்றை ஒதுக்கீடு…

4G சேவை அளிப்பதற்காக நமது BSNL நிறுவனம்
 700 MHz band அல்லது 2100 MHz band அலைவரிசையை 
ஒரு வருடத்திற்கு தற்காலிகமாக ஒதுக்குமாறு
 மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது 
பரிசீலிக்கப்படுவதாக இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார். 
அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு BSNL அரசிற்கு கட்டணம் 
செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, 10 January 2018

ஒப்பந்த ஊழியர் உற்பத்திச்சட்டம் 1970 
இந்திய தேசத்தில் ஒப்பந்த ஊழியர் ஒழிப்பு சட்டம் 
Contract Labour (Regulation and Abolition) Act, 
என்று 1970லேயே கொண்டு வரப்பட்டாலும்…
  ஏறத்தாழ 50 ஆண்டு காலத்தில் ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கைப் பெருகியே வருகின்றது.

 நிரந்தர ஊழியர்கள் என்பவர்கள் இனி இந்திய தேசத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்ற நிலை நிலவுகின்றது. கடந்த 3 ஆண்டுகளில் தற்போதைய அரசின் ஆட்சியில் ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை பெருகி வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் 
கடந்த 3 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர் 
எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
2015 – 8,39,234
2016 – 9,64,001
 2017 – 11,10,603
ஏறத்தாழ 3 கோடிக்கு மேல் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக 
பதிவு செய்து காத்திருக்கும் வேளையில்…மேற்கண்ட எண்ணிக்கை மேலும் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் 
அதிகரிக்குமேயன்றி குறைவதற்கான சூழல் இல்லை. 

அரசு CONTRACT LABOUR ABOLITION ACT
 என்பதற்குப்பதிலாக CONTRACT LABOUR ENHANCEMENT ACT
என்று மாற்றுவது பொருத்தமாக இருக்கும். 

இத்தகைய நிலையில் BSNLலில் ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்போம் எனக்கூறுவது நகைப்புக்கிடமாக உள்ளது. 

Tuesday, 9 January 2018

யார் குற்றவாளி...
ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை


கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL அலுவலகத்தில் 
23 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த  மனோஜ் என்பவர் மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காத காரணத்தால்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

அருமனை பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடையாலுமூடு BSNL அலுவலகத்தில்  கேபிள் ஜாயிண்டராக பணியாற்றி வந்தார்
ஒப்பந்த தொழிலாளரான இவருக்கு கடந்து மூன்று மாதங்களாக 
ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மனோஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது  தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்

BSNL ஒப்பந்த தொழிலாளி கடந்த 3 மாதங்களாக ஊதியம் பெறவில்லை எனக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்த கொடுமையான சம்பவம் தொடர்பாக அருமனை காவல்நிலைய போலீசார் 
விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்…
வெறும் சோற்றுக்கு வந்ததிங்கே பஞ்சம்…

Monday, 8 January 2018

தொடர் போராட்டம்

08/01/2018 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து சங்கக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

30/01/2018 அன்று அண்ணல் காந்தி மறைவு தினத்தில் அவரது  சமாதியில் அனைத்து சங்கத்தலைவர்கள் அஞ்சலி. 
அதன் பின் 5 நாட்கள் தொடர் சத்தியாக்கிரகம்.

       30/01/2018 முதல் நாடு முழுக்க அண்ணல் காந்தி வழியில் 
விதிப்படி வேலை மற்றும் ஒத்துழையாமை இயக்கம்....

28/02/2018 அன்று டெல்லி சஞ்சார் பவன் நோக்கி
 மாபெரும் முற்றுகைப் போராட்டம்.

ஒரு வார காலத்திற்குள் மந்திரியை சந்தித்து மனு கொடுத்தல்.

 அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும்
 சந்தித்து ஆதரவு கோருதல்.

செல் கோபுரம் துணை நிறுவன உருவாக்கம்  எதிர்த்து 
சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.


கோரிக்கைகள்
01/01/2017 முதல் BSNL  ஊழியர்களுக்கு 
15 சத ஊதிய மாற்றம் அமுல்படுத்துதல்…

இரண்டாவது ஊதிய மாற்ற இழப்புக்களை சரிசெய்தல்…

01/01/2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்தல்….

செல்கோபுரம் துணை நிறுவன 
உருவாக்கத்தை அரசு கைவிடுதல்…

ஓய்வு பெறும் வயதை 60லிருந்து 58ஆகக் குறைப்பதையோ விருப்ப ஓய்வுத்திட்டத்தை கட்டாயமாக அமுல்படுத்துதலையோ தவிர்த்தல்…


தோழர்களே….
நமது தேசத்தந்தை உயிர் நீத்த நாளில்…
நாம்  உயிர்த்தெழுவோம் ஒன்றாய்….
இறுதிக்கட்டப் போராட்டத்தை...
உறுதியாக… அமைதியாக நடத்திடுவோம்…
ஊழியர் நலன்… நிறுவன நலன்
இணைந்தே காத்திடுவோம்…
கிளைக்கூட்டம்
NFTE
காரைக்குடி GM அலுவலகக்கிளை
மற்றும்
புறநகர்க்கிளைகள் இணைந்த
கிளைக்கூட்டம்
--------------------------------------------------------------------------------------------------
10/01/2018 – புதன்மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம்காரைக்குடி
------------------------------------------------------------------------------------------------------
  •  ·        கிளை மாநாடுகள்
  • ·        அகில இந்திய மாநாடு பங்கேற்பு
  • ·        தலமட்டப்பிரச்சினைகள்
  • ·        அமைப்பு நிலை
  • ·        மற்றும் இதர பிரச்சினைகள்


தோழர்களே...வருக
அன்புடன் அழைக்கும்

L.கார்த்திகா                  M.ஆரோக்கியதாஸ்
GM(O) கிளைச்செயலர்        புறநகர்க்கிளைச்செயலர்
NFTE அகில இந்திய மாநாடு

NFTE
5வது அகில இந்திய மாநாடு
2018 மார்ச் 14..15…16…
குருநானக் பவன் - அமிர்தசரஸ் - பஞ்சாப்

தங்கக்கோவில் நகரிலே…
தங்கம் நிகர் சங்கத்தின்…
அகில இந்திய மாநாட்டில்…
சங்கமிப்போம்…. தோழர்களே…

Sunday, 7 January 2018

அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

செல் கோபுரங்கள் தனி நிறுவனம்

பதிவு செய்ததை எதிர்த்து… 
துவக்கத்தை எதிர்த்து…

புதிய தலைமை அதிகாரி 
நியமனத்தை எதிர்த்து…

BSNL அனைத்து அதிகாரிகள் 
மற்றும் ஊழியர் சங்கங்கள்
சார்பாக
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
08/01/2018 – மதியம் 01.00 மணி – 
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
தோழர்களே… வாரீர்… 

Friday, 5 January 2018

ஜனவரி – 6 
தோழர்.குப்தா நினைவு நாள்

உணர்வளித்தவன்…
உணவளித்தவன்…

குளிரச்செய்தவன்…
கொதிக்கச்செய்தவன்…

நிலைக்கச்செய்தவன்…
நிமிரச்செய்தவன்…

நிலைத்து நின்றவன்…
நிலத்து நின்றவன்…

நிலையாய் என்றும்…நம்
நெஞ்சில்...நினைவில்..
நிலைத்து நிற்பவன்..

தோழர்.குப்தா புகழ் ஓங்குக…
தொடரும் போராட்டம்…

செல் கோபுரம் தனி நிறுவனம் எதிர்த்து
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக
08/01/2018 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்.
(மறுபடியும் முதலில் இருந்து...) 

Thursday, 4 January 2018

தேவை நிரந்தரத் தீர்வு…

பல்வேறு போராட்டங்களுக்குப்பின்... ஒப்பந்த ஊழியர்களது சம்பளப்பட்டுவாடாவிற்கான.. நிதி ஒதுக்கீடு இன்று 
தமிழகத்திற்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை மத்திய நிர்வாகத்தால் மிகவும் இழுத்தடிக்கப்பட்டு விட்டது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும், 
ஒப்பந்த ஊழியர் சங்கங்களும் தொடர்ந்து தங்களது போராட்டத்தை 
நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. 

பலமுறை தொழிலாளர் ஆணையரிடம் முறையீடு செய்யப்பட்டது. ஆனாலும் நிர்வாகம் அவசர கதியில் இப்பிரச்சினையில் இயங்கவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. 
நவம்பர், டிசம்பர் என இரண்டு மாத சம்பளம் நிலுவையில் உள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு முழுமையாக செய்யப்படுமா? அல்லது அரைகுறையாக ஒதுக்கப்பட்டு நவம்பர் மாத சம்பளம் மட்டும் வழங்கப்படுமா என்பதுவும் கேள்விக்குறியாக உள்ளது. 

மேலும் ஒப்பந்த ஊழியர்களது எண்ணிக்கைப் பெருமளவில் குறைக்கப்படும் என்பதுவும் தற்போதைய விவாதப்பொருளாகி உள்ளது. ஆளெடுப்பு அறவே இல்லாத நிலையில் BSNL நிறுவனம் ஒப்பந்த ஊழியர்கள் இல்லாமல் இயங்கிட இயலாது என்பது யாவரும் அறிந்த உண்மை. நிர்வாகம் இதைப்பற்றி சிந்திக்காமல் ஒப்பந்த ஊழியர்களைக் குறைக்க முயற்சிக்குமேயானால் அது ஒப்பந்த ஊழியர்களின் சோற்றிலும், தன் தலையிலும் மண்ணை அள்ளிப்போடும் மனிதாபிமானமற்ற… சிந்தனையற்ற செயலாக அமையும். 
அத்தகைய சூழலில் மிகவும் 
கடுமையான போராட்டம் வெடித்தே ஆகும்.

நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதை முறைப்படுத்த வேண்டும். அந்தந்த மாவட்டத் தேவைகளுக்கு ஏற்ப நிலைமை மாறுபடும். எனவே மாவட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.

பணிபுரியும் ஊழியர்களுக்கு 7ம் தேதி கூலி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரே குத்தகைக்காரருக்கு பல மாவட்டங்களில் குத்தகை அளிக்கும் முறையைக் கட்டுப்படுத்த வேண்டும். நிர்வாகம் பில்கள் பட்டுவாடாவில் தாமதம் காட்டினாலும் குத்தகைக்காரர் தனது நிதியில் இருந்து மாதம் தவறாமல் கூலியை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையோடு குத்தகை வழங்கப்பட வேண்டும்.

பாடுபட்டு உழைக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு...
எந்தவித எதிர்காலமும் இன்றி…
பணிபுரியும் அடிமட்ட ஊழியருக்கு…
தேவை நவம்பர் மாத சம்பளம் மட்டுமல்ல….
தேவை மாதாமாதம் கையேந்தாத நிரந்தரத்தீர்வு….