Saturday 19 August 2017

கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 
வேலைநிறுத்தம்

160 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது நமது அஞ்சல்துறை. 
6 தலைமுறை ஊழியர்களைக் கண்டது நமது அஞ்சல்துறை. 
ஆனால் அஞ்சலில் இன்றும் அன்றாடக்கூலிகளாக 
தொழிலாளர்கள் தொடர்ந்து துன்புற்று வருகின்றனர். 
இந்திய தேசம் முழுவதும் ஏறத்தாழ 
1லட்சத்து 30 ஆயிரம் கிளை அஞ்சலங்கள் உள்ளன. 
நாட்டின் மக்கள்தொகையில் 80 சதத்திற்கும் அதிகமானோர் 
கிராமப்புற அஞ்சல் சேவையைப் பயன்படுத்துகின்றனர். 
தற்போது 2 லட்சத்து 70 ஆயிரம் கிராமப்புற ஊழியர்கள் 
GDS என்னும்  அடைமொழியோடு பணிபுரிந்து வருகின்றனர். 
இவர்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கூடப் 
பணியில்லை என்பது கொடுமையிலும் கொடுமை
இவர்களுக்கு உரிய ஓய்வூதியம் இல்லை. 
நியாயமான பணிக்கொடை இல்லை. 
பணியும் நிரந்தரமில்லை... 

இவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக...
நவம்பர் 2015ல் ஓய்வு பெற்ற அஞ்சல் வாரிய உறுப்பினர் 
திரு. கமலேஷ் சந்திரா அவர்களின் 
தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது...
மேற்கண்ட குழுவின் அறிக்கையை  
உடனடியாக வெளியிடக்கோரி கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கம் ஏப்ரல் 2016ல் வேலை நிறுத்தம் செய்தது. 
உடனடியாக குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும்...
குழுவின் பரிந்துரைகள் சாதகமாக அமுல்படுத்தப்படும் எனவும் 
அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.  
ஆனாலும் அந்தக்குழு தனது அறிக்கையை ஓராண்டு இடைவெளியில் நவம்பர் 2016ல்தான் சமர்ப்பித்தது. 
ஏறத்தாழ 10 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் குழுவின் பரிந்துரைகள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை. 
அஞ்சல் நிர்வாகமும் அரசும் மோசமான நிலையையே எடுத்தது. 
உதாரணமாக பணிக்கொடையின் அளவை...
5 லட்சம் என குழு பரிந்துரை செய்திருந்தது..
ஆனால் நிர்வாகமும் அரசும் 1.5 லட்சமே தர முடியும் என கையை விரித்தன. எனவே வேறு வழியின்றி...
தோழர்.மகாதேவய்யா அவர்களின் தலைமையிலான 
AIGDSU – ALL INDIA GRAMEEN DAK SEVAKS UNION
சங்கம் தனது போராட்டத்தை துவக்கியுள்ளது. 

20/07/2017 அன்று நாடு முழுக்க 
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. 
ஆனால் நிர்வாகத்திடமும்... அரசிடமும்..எந்த அசைவுமில்லை. 
எனவே 16/08/2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் 
கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

ஏறத்தாழ 75 சதம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய 
NFPE சங்கம் இவர்களின் வேலைநிறுத்தத்தை
முறியடிக்க முயற்சிக்கின்றது. 
காரணம் தோழர்.மகாதேவய்யா 
இவர்களின் அணியில் இல்லை என்பதுதான்... 
எனவே தங்கள் அணி சார்ந்து ஒரு தனித்த சங்கம் ஆரம்பித்து ஊழியர்களை தங்கள் பக்கம் வளைக்க ஆரம்பித்துள்ளது NFPE சங்கம். 
நாடு முழுவதும் அஞ்சலக வாயில்களில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தம் மேற்கொண்டு முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். 
ஆனால் அஞ்சல் அலுவலகங்களுக்கு உள்ளே நிரந்தர ஊழியர்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டிருக்கின்றனர். 
இத்தகைய காட்சியைக் காணும்போது 
நமது மனம் வேதனை கொள்கின்றது. 

இதனிடையே இலாக்கா அமைச்சருடன்
பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 
ஆயினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை...
எனவே போராட்டம் தொடர்கின்றது......
தன்னந்தனியாக தளராமல் போராடும் 
AIGDSU கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கத்திற்கு
நமது வாழ்த்துக்கள் உரித்தாகுக...
துரோகங்கள் என்றும் நிலைத்து நிற்காது…
போராட்டங்கள் என்றும் வீண்போகாது…
வாழ்க… கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம்…
 ================================================
கோரிக்கைகள்
மத்திய அரசே… தபால் இலாக்காவே….
  • கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் 8 மணி நேர வேலை வழங்கு...
  • கமலேஷ் சந்திரா குழு பரிந்துரைகளை அமுல்படுத்து…
  • டெல்லி மற்றும் சென்னை தீர்ப்பாய உத்திரவின்படி ஓய்வூதியம் வழங்கு…
  • இலக்குகளை TARGET நிறைவேற்றச்சொல்லி கொடுமை செய்யாதே…

No comments:

Post a Comment