Friday 21 July 2017

நெஞ்சம் நிறைந்த NFTCL தஞ்சை மாநாடு…

உழைப்பாளர்களின் உரிமை மீட்பு பூமியாம் தஞ்சையிலே NFTCL தஞ்சை மாவட்ட அமைப்பு மாநாடு 20/07/20107 அன்று தோழர்.பிரின்ஸ் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது. மாவட்ட மாநாடு அல்ல மாநில மாநாடு என்று வியக்கும் அளவு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொடியேற்றம், அஞ்சலி, வரவேற்புரை, தொடக்கவுரை, நிர்வாகிகள் தேர்வு வாழ்த்துரை, சிறப்புரை, , கருத்தரங்கம், தீர்மானங்கள் என செயலூக்கமிக்க மாநாடாக அமைந்தது. கீழ்க்கண்ட தோழர்கள் நிர்வாகிகளாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
மாவட்டத்தலைவர் தோழர்.பிரின்ஸ்
மாவட்டச்செயலர் தோழர். இளங்கோ
மாவட்டப்பொருளர் தோழர். குணசேகரன்

புதிய பொறுப்பாளர்களுக்கும் 
தஞ்சைத் தோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்
-----------------------------------------------------------------------------------------
செங்கொடி ஏந்திய செம்மல்கள்

தஞ்சை மண்ணின் தனிப்பெரும் பெருமைமிக்கவர்கள் திருவாரூர்த்தோழர்கள். NFTCL கொடியேந்தி வீரமுழக்கமிட்டு மாநாட்டு அரங்கை அதிர வைத்தனர். தோழர்களும் தோழியர்களும் திரளாக செங்கொடியேந்தி தோழர்.மதிவாணன் அவர்களிடம் செங்கொடி சேர்த்தனர். திருவாரூர்த்தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------------------------
கருத்தைக் கவர்ந்த கருத்தரங்கம்

வருவாய்ப்பெருக்கத்தில் ஒப்பந்த ஊழியர்களின் பங்கு என்னும் தலைப்பில் தஞ்சைப் பொதுமேலாளர் திரு.வினோத் அவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது. NFTCL சார்பாக எழுப்பப்பட்ட… ஒப்பந்த ஊழியர்களை SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரிக்கும் பணியைத் தலைமையேற்று செவ்வனே செய்து முடித்த  மிகச்சிறந்த மனிதநேயம் கொண்ட தஞ்சைப் பொதுமேலாளரின் மனித நேயத்திற்கு நாம் தலை வணங்குகின்றோம். எங்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கூடுகின்றார்களோ அங்கெல்லாம் நான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவேன் என அழுத்தமாக தனது உரையில் தெரிவித்த அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------------------------
செய்திகளைச் சேர்த்திடுவோம்….

தோழர்.மதி அவர்கள் எங்கு சென்றாலும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக்கி மக்கள் மன்றங்களில் கொண்டு சேர்ப்பது அவரது தனிச்சிறப்பு. அந்த வகையில் தஞ்சையிலும் பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் தோழர்.மதி அவர்களைப் பேட்டி கண்டனர். அடிமட்ட ஊழியர்களைச் சுரண்டும் இந்த அரசின் தவறுகள், மக்களை வாட்டிஎடுக்கும் வன்கொடுமைகள் பற்றி  தெளிவான அரசியல் கருத்துக்களை மாநாட்டு அரங்கிலே பத்திரிக்கையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
-----------------------------------------------------------------------------------------
அரங்கங்கள் அதிரட்டும்…

NFTCL ஒப்பந்த ஊழியர்களின் கூட்டம் ஏதோ ஒப்புக்கு நடத்தப்படும் கூட்டமல்ல.. உணர்வுப்பூர்வமாக…. உரிமை மீட்புப்போராக… அடிமட்ட ஊழியனின் சிரம் நிமிர்த்தும் களமாக நமது கூட்டங்கள் நடைபெறுகின்றன. அரங்கங்கள் நிறைகின்றன. அகமும் நிறைகின்றது. உரிமைக்குரல்கள் எழுகின்றன. தீர்வுப்பாதைகள் தெரிகின்றன. இருந்தோம்… அழிந்தோம்.. என்றில்லாமல் எழுந்தோம்… வாழ்ந்தோம்  என்று உணர்வோடு நடக்கும் NFTCL ஒப்பந்த ஊழியர் கூட்டங்கள் அன்றைய மஸ்தூர்களின் எழுச்சியை நினைவூட்டுகின்றன. இந்த உணர்வு நிலை தொடர வேண்டும். தோழர். மதி அவர்களின் வழிகாட்டுதலில் அவர்களின் வாழ்வு நிலை உயர வேண்டும்.

No comments:

Post a Comment