Wednesday 5 April 2017

மாற்றங்களும்… ஏமாற்றங்களும்…

தோழர்களே…
எல்லோரையும் மன்னர் என்றான் மகாகவி பாரதி…
எல்லோரையும் போன்மெக்கானிக் என்றாக்கினார்
காலத்தால் மறையாத காவியத்தலைவன் குப்தா…

DOT காலத்தில் நடத்தப்பட்ட...
இலாக்காத்தேர்வு நினைவுகள் பசுமையாய்..
நெஞ்சில் இன்னும்  நிழலாடுகின்றன…

காரைக்குடி அழகப்பா கல்லூரியில்
போன்மெக்கானிக் தேர்வு…
தேர்வு அதிகாரியாக...
அன்றையக் கோட்டப்பொறியாளர்...
திரு.பழனியப்பன் பணியில் இருந்தார்…

அவர் தேர்வெழுதும் ஒரு தோழியரிடம்
ஏதோ சொல்லிப் பிரச்சினை செய்கிறார் என
அங்கே தேர்வுப்பணியில் இருந்த தோழர்கள்
நம்மிடம் மெதுவாக வந்து சொல்லிச்சென்றனர்…

நேரடியாக திரு.பழனியப்பனிடம் சென்றோம்…
ஒரு சாதாரண தொழிலாளி தேர்வெழுதி
உயர்வு பெறுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா?
என்று நாம் கோபமாகக் கேட்டபோது..
அவர் அமைதியாக சொன்னார்...

“நான் என்னப்பா… 
தவறுதலாகச் சொல்லிவிட்டேன்...
அந்த அம்மா பரிட்சைப்பேப்பரைத்
தலைகீழாக வைத்துக்கொண்டு
சும்மா உட்கார்ந்திருந்தது…
பரிட்சைப் பேப்பரை நேரா வையுங்கம்மா..
என்றுதானே சொன்னேன்…
இதுக்கெல்லாம்  சங்கத்திலே இருந்து வந்து..
என்கிட்டே பிரச்சினை செய்யணுமா? 
என்று அமைதியாகக் கேட்டார்….

அவ்வாறு கேட்டதோடு மட்டுமல்ல…
“நீங்க அமைதியாப் போங்கப்பா…
நானே அந்த அம்மாவுக்கு பேப்பரில்
டிக் அடித்துக் கொடுத்து விடுகிறேன்....
என்றும்  சொன்ன திரு.பழனியப்பன்...
தான் சொன்னவாறே செய்தார்…

அந்த அம்மையாருக்கு பேப்பரில்..
டிக் அடிக்கக் கூடத்தெரியாது…
பள்ளிக்கூடத்தைப் பார்த்து..
மழையில் ஒதுங்கிய ரகம்…
ஏடறியேன்.. எழுத்தறியேன்…
கையெழுத்து மட்டுமே அறிவேன் ரகம்…

அந்த அம்மையாரும் 
அன்று போன்மெக்கானிக் தேர்வில் வெற்றி பெற்று
இன்று டெலிகாம் டெக்னீசியன் என்னும்
மதிப்போடு பணிபுரிகிறார்…
அந்த அம்மையார் மட்டுமல்ல….
இலட்சக்கணக்கான அடிமட்ட ஊழியர்கள்
போன்மெக்கானிக் ஆகப்பதவி உயர்வு பெற்றுத்
தங்கள் வாழ்க்கைத்தரம் உயரப்பெற்றனர்…

ஆனால் இன்று….
போன்மெக்கானிக் தேர்வெழுத...
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்…
தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்…
தமிழகம் முழுவதும் உள்ள தோழர்கள்
சென்னை சென்று தேர்வெழுத வேண்டும்…

காரைக்குடி மாவட்டத்தில்
இருபதுக்கும் மேற்பட்டவர்கள்
நான்காம் பிரிவு ஊழியராக உள்ளனர்..
ஆனால் இரண்டே பேர்கள்தான்
பத்தாம் வகுப்புத் தேறியவர்கள்…

அன்று…
பரிட்சை இல்லாமல் பதவி உயர்வு என்று
முழக்கங்கள் சொல்லி வாக்கு கேட்டார்கள்……
ஊழியர்களும் நம்பிக்கெட்டார்கள்..

நாளை…
பரிட்சைக்கட்டணம் இல்லாமல் தேர்வு..
என்ற முழக்கங்கள் கேட்கும்…
ஊழியர்களும் வழக்கம்போல் நம்பிக்கெடுவார்கள்…

மாற்றங்கள் என்பவை
முன்னேற்றங்களாக இருக்க வேண்டும்…
மாற்றங்கள் ஏமாற்றங்களாக தொடரக்கூடாது…
செங்கொடிகளுக்கு அது சிறப்பில்லை….

No comments:

Post a Comment