Wednesday 5 October 2016

சாறைப் பிழி... தூர ஏறி...


சென்னை முதன்மைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் 
பல ஆண்டுகளாகப் பணிபுரிந்த  11 ஒப்பந்தத் தொழிலாளர்கள் 
பணி  நீக்கம் செய்யப்பட்டார்கள் என்ற செய்தியைப் படித்தவுடன்...
நம் மனம் கொதித்தது... கனத்தது...

இது நவராத்திரி காலம்...
தொழிலாளர்கள் என்ன கொலு பொம்மைகளா?
இந்த ஆண்டு கொலுவிற்கு... 
இந்த பொம்மைகள்  வேண்டாம் என்று சொல்வதற்கு?

நன்றியுணர்ச்சி நமது தேசத்தின் பண்பாடு... அடையாளம்...
அதனால்தான் ஆயுதங்களுக்கு கூட ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்...
ஆடு... மாடுகளுக்கு கூட பொங்கல் வைத்துப் பூரிக்கிறோம்...

ஆனால்...
ஆண்டாண்டு காலம் உழைத்து இளைத்த தொழிலாளியை...
சக்கையாய்ப் பிழிகிறோம்...சாற்றைச்  சுவைக்கிறோம்...
சந்தர்ப்பம் வரும்போது சாதாரணமாக வீசி எறிகிறோம்...

ஒரு மர நிழலில் ஓய்வெடுத்த ஒரு மனிதனுக்கு..
அந்த மரத்தின் கிளையை முறிக்க உரிமையில்லை என்றார்  புத்தர்...
வெய்யிலில் காய்ந்தாலும் நிறுவனத்திற்கு நிழல் தருபவர்கள்...
நித்தம் பணி செய்து களைத்திடும் தொழிலாளர்களே...
அவர்களின் கிளையை முறிக்க எவருக்கும் உரிமையில்லை....

ஒரு ஏழையின் முகத்தைப்பார்...
அவன் வாழ்வில் உன் பங்கு என்ன என்று எண்ணிப்பார்....
அவன் வாழ்வில் ஒரு துளி கூட உன் பங்கு இல்லையெனில்..
நீ வாழ்வதில் ஒரு துளி கூட பயனில்லை...
என்று அழுத்தமாகச் சொன்னார் அண்ணல் காந்தி....

விதிகளுக்கும்... சட்டங்களுக்கும் மேலானது மனிதநேயம்...
தமிழ் மாநில நிர்வாகம் மனித நேயத்தோடு செயல்பட வேண்டும்...
நவராத்திரி காலம் வெகுமதிகளின் காலம்...
உழைத்தவனுக்கு நாம்  கொடுக்கும் வெகுமதி இதுதானா?

உழைப்பவன் வீட்டின் அடுப்பில் நெருப்பு வைக்கலாம்...
உழைப்பவனது அடிவயிற்றில் நெருப்பு வைக்கலாமா?

No comments:

Post a Comment