Sunday 31 May 2015

ஜூன் 10
அறப்போர் 
கரங்கள் உயராமல் காரியங்கள் இல்லை.. 


மாதந்தோறும் மாறாத துயரங்கள்.. 
மாவட்டந்தோறும் தீராத துன்பங்கள்...
கொள்ளை அடிக்கும் குத்தகைக்காரர்கள் ..
குறட்டை விடும்  அதிகாரிகள்..

ஒப்பந்த ஊழியர் வாழ்வு 
ஒப்பேறாமலே  போவதா?

உழைப்பவன் வாழ்வு..
உருப்படாமலே போவதோ?

இனி பொறுப்பதில்லை..
இனியும் பொறுப்பதில்லை.. 

தோழனே.. 
ஏந்திடு நெஞ்சில் எரிதழல்..
சேர்ந்திடு... 
சென்னையில்..பெருந்திரள்..

ஒப்பந்த ஊழியனே...
நீ.. திரள வேண்டும்...
உன்னைக்கண்டு...
நிர்வாகம் மிரள வேண்டும்...
தொடரும்..
உனது துன்பங்கள் அகல வேண்டும்...

சென்னை செல்வோம்.. சேர்ந்து வெல்வோம் 

--------------------------------------------------------------------------------------------------------------------------
09/06/2015 அன்று இரவு 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் இருந்து 
சென்னைக்கு செல்ல சிறப்பு அரசுப்பேருந்து 
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
தோழர்கள் திரள வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

Friday 29 May 2015

வாழ்த்துக்கள் 
=============

31/05/2015 
பணி நிறைவு பெறும் தோழர்கள் 

கனிவும் கடமையும் மிக்க 
தோழர். S.சேகராஜன் 
TTA/காரைக்குடி 

பணிவும் பாசமும் மிக்க 
தோழர். K.மலைராஜன் 
TM/முதுகுளத்தூர் 

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க  வாழ்த்துகின்றோம்...

Wednesday 27 May 2015

செப்டம்பர் 2
நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் 

தொழிலாளர் நலச்சட்டங்களை 
கண்மூடித்தனமாக திருத்த முனையும் 
மோடி அரசைக் கண்டித்து 

தனியாருக்கு சாமரம் வீசும் 
தறிகெட்ட நிலையை எதிர்த்து 

தொழிலாளர் விரோத 
தொழிற்சங்க விரோத 
மத்திய அரசைக் கண்டித்து 

11 மத்திய தொழிற்சங்கங்களின் 
தலைமையில் 
அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து 

02/09/2015 
செப்டம்பர் 2 அன்று 
நாடு தழுவிய 
வேலை நிறுத்தம் 

தோழர்களே... தயாராவீர்...
வாழ்த்துக்கள் 
==============
பெருமைமிகு NFTE 
சேலம் மாவட்டச்சங்கத்தின் 
புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

மாவட்டத்தலைவர். தோழர். S.சின்னச்சாமி 
மாவட்டச்செயலர். தோழர். C.பாலகுமார் 
மாவட்டப்பொருளர். தோழர். S.காமராஜ்  

ஆகியோர் உள்ளிட்ட 
மாவட்டச்சங்க நிர்வாகிகளின் 
சங்கப்பணி சிறந்திட 
வாழ்த்துகின்றோம்.

Tuesday 26 May 2015

மந்திரி சூளுரை 
BSNL... MTNL நிறுவனங்களை 
உயர.. உயர.. வைப்போம்..

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...

மோடி அரசின் ஓராண்டு நிறைவையொட்டி...
நமது இலாக்கா மந்திரி திருவாய் மலர்ந்தருளியுள்ளார்...

BSNL மற்றும் MTNL நிறுவனங்களின் வளர்ச்சியில் 
ஆறேழு ஆண்டுகளை காங்கிரஸ் வீணடித்து விட்டது.
நாங்கள் ஓராண்டை மட்டுமே வீணாக்கியுள்ளோம்...

செயல்பாடு மிக்க வாஜ்பாய் ஆட்சியில் 
பல கோடி லாபம் ஈட்டிய BSNL நிறுவனம்...
செல்வாக்கு மிக்க எங்கள் ஆட்சியில் 
செயலிழந்த நிலையில் இருப்பது வருத்தம் அளிக்கிறது...

கடந்த ஓராண்டாக...
இதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பதால்..
என்னால் தொழிற்சங்கப்பிரதிநிதிகளைக் கூட சந்திக்க முடியவில்லை...

BSNL மற்றும் MTNL நிறுவனங்களை...
ஒரு வழி பண்ணிய பின்புதான்..
நான் ஊழியர் பிரதிநிதிகளை சந்திப்பேன்..

இது சம்பந்தமாக எங்கள் அரசு..
அம்பானியுடனும்.. 
அதானியுடனும்...
அதி தீவிரமாக ஆலோசித்து வருகிறது...

பிரதமர் வெளிநாட்டில் இருந்து...
5 ஆண்டுகள் கழித்து இந்தியா 
திரும்பும்போது நிச்சயம் BSNL நிறுவனத்திற்கு 
திருப்புமுனை அமையும்...

அகண்ட பாரத கண்டம் வாழ்க.. வாழ்க..

Monday 25 May 2015

செய்திகள் 

  • 01/06/2015 முதல் சேவை வரி SERVICE TAX 12.36 சதத்திலிருந்து 14சதமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை தனியாக வசூல் செய்யப்பட்ட கல்வி வரி தற்போது 14 சத வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும். போகிற போக்கில் செலவில் பாதி சேவை வரி என்று ஆனாலும் ஆச்சரியமில்லை.

  • ITI இரண்டாண்டு கல்வித்தகுதி உள்ள தோழர்கள் எந்த பாடப்பிரிவை  எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும்,  9020 சம்பள விகிதத்தில் நியமனம் செய்யப்பட்ட 5ஆண்டுகள் சேவை உள்ள  SPORTS ASSISTANTS விளையாட்டு வீரர்களும்   TTA இலாக்காத்தேர்வு எழுதலாம் என BSNL தலைமையகம் விளக்கமளித்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்காமல் நேரடியாக பெறப்பட்ட பட்ட வகுப்புகள் செல்லாது எனவும் BSNL விளக்கமளித்துள்ளது. 

  •  GPF முன்பணம் வழங்குவது உள்ளிட்ட  அனைத்து  GPF சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் DOT CELLக்கு அனுப்பிட வேண்டும் என DOT  நமது  BSNL  உருவான 15 ஆண்டுகளுக்குப்பின் பிரச்சினையை எழுப்பியுள்ளது.  முன்பணம் வழங்கும் அதிகாரம் DOT க்கு சென்றுவிட்டால் மேலும் பிரச்சினைகள் உருவாகும் என நமது சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. GPF நல்ல நாளிலேயே தில்லைநாயகமாக உள்ளது. DOTக்குப் போனால் மேலும் திணறல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

  • மருத்துவபில்கள் பட்டுவாடா செய்வதில் கடும் தாமதம் நிலவுவதால் பல மருத்துவமனைகள் BSNL ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்குகின்றன. நமது ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தரமுள்ள மருத்துவமனைகளின் பில்களை உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

  • 7.5 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு 15 சத ஊதிய உயர்வு அளிப்பதற்கான இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 30 மாத நிலுவைத்தொகையும் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும்

  • இந்தியாவில் அகன்ற அலைவரிசை இணைப்புக்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


  • தமிழகத்தின் CGM ஆக தற்போது பொறுப்பில் உள்ள                 திரு. G.V .ரெட்டி அவர்கள் 30/09/2015 அன்று பணி நிறைவு செய்கின்றார். எனவே அவரது இடத்தில் பணி புரிய தற்போது சென்னையில் PGM ஆகப்பணிபுரியும்  திருமதி.பூங்குழலி அவர்களுக்கு தமிழ்நாடு வட்டத்திற்கு மாற்றல் வழங்கப்பட்டுள்ளது.

  • நமது NFTE  சங்கத்தின் சேலம் மாவட்ட மாநாடு இன்று 26/05/2015 நடைபெறுகின்றது. மாநாடு சிறப்புடன்  நடைபெற நமது வாழ்த்துக்கள்.

Sunday 24 May 2015

தாயிற் சிறந்த உயிரில்லை...

காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் 
தோழர். K.அசோகன் JAO அவர்களின் அன்புத்தாயார் 
திருமதி.பாஞ்சாலி அம்மாள் 
உடல்நலக்குறைவால் 24/05/2015 அன்று இயற்கை எய்தினார். 
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
---------------------------------------------------------------------------------

தோழர்களே... 
நீங்கள் மேலே  படித்த செய்தி 
வழக்கமான இரங்கல் செய்திதான். 
ஆயினும் அதில் தோய்ந்துள்ள 
அன்பின் ஆழத்தை 
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தோழர் அசோகனின் தாயார் 
ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாக 
பக்கவாத நோயால் பரிதவித்தார். 
தாய்க்குத் தலைமகன் அவரை தலை முழுகி விட.. 
இளைய மகன் அசோகன் தன் தாயை 
எட்டு ஆண்டுகளாகத் தலை மேல் சுமந்தார்.
உணவு ஊட்டுவது... 
உடை மாற்றுவது.. 
சிறுநீர் கழிவை சிரத்தையாக அகற்றுவது... 
மலக்கழிவை மனம் நோகாமல் சுத்தம் செய்வது...
மருந்து மாத்திரைகளை மறக்காமல் கொடுப்பது... 
என... 
அனைத்துப் பணிவிடைகளையும் 
அன்றாடம் அலுக்காமல் அன்போடு செய்து வந்தார்..
தன் தாயாரைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற 
காரணத்திற்காகவே வெளியூர் பயணங்களை
தவிர்த்து வந்தார்.
தவிர்க்க இயலாத காலங்களில் மட்டும்..
தன் தங்கையிடம்  விட்டுச்செல்வார்.

கடந்த.. 
பதினைந்து நாட்களாக சுய நினைவின்றி 
படுத்த படுக்கையாக இருந்தபோது...
பாட்டில் தாலாட்டி..
பாலூட்டிய அன்னையின்  பசி போக்க...
பாட்டிலில் பாலூட்டினார்... 

இன்றைய உலகில் இது..
சின்னத்திரைகளிலும் சினிமாக்களிலும் மட்டுமே 
காணக்கிடைக்கும் காட்சி..
காசுக்காக கதாநாயகர்கள் 
கல் நெஞ்சம் கரைய நடிப்பார்கள்...
காசைக் கொடுத்து விட்டு நாமும்
கண்ணீர் மல்கி.. கனத்த இதயம் கொள்வோம்..

ஆனால் உண்மை உலகில்..
கடமை செய்த  கதாநாயகர்களும் 
கண்டு ரசித்த ரசிகர்களும்...
மூவுலகிலும் ஈடற்ற தாயை 
முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு...
அங்கு இடமில்லாது போனால்..
வீதியில் விட்டு விட்டு..
பரபரப்பாக இயங்கி கொண்டிருப்பார்கள்..

அன்பு அருகி வரும் இவ்வுலகில்..
அன்னைக்கு திண்ணை கூட தராத...
அரக்க மனங்கள் பெருகி வரும் நிலையில்..
அன்னையைக் காத்த அசோகன் பணியை 
போற்றுகின்றோம்... புகழுகின்றோம்...

Sunday 17 May 2015

மே - 18
கொள்ளி வைக்காமல்
அள்ளி வைத்த
முள்ளிவாய்க்கால் 
மே 18
இலட்சியத்தமிழன்...
இலட்சக்கணக்கில் அழிக்கப்பட்ட நாள்..

யாதும் ஊரே.. யாழும் ஊரே 
என்று வாழ்ந்த  தமிழன்...

முள்ளிவாய்க்காலில்..
வான் வழி கொள்ளியால் 
கொத்துக் கொத்தாய் 
கொள்ளி வைக்கப்பட்டான்..

முள்ளிவாய்க்கால் படுகொலை 
மானுடத்தின் பேரவலம்..
மனித குலம்..
மன்னிக்க முடியாத கொடுமை..

ஈழத்துக்கவிஞன் ஒருவன் எழுதினான்..
"அரைகுறை உயிரோடு...
அரை நிர்வாண உடலோடு..
கிடந்த எங்களின்..
வழிந்த குருதியை அடைத்திட 
கிழிந்த தன் சேலை  தந்தாள் 
என் தாய்.. ஈழத்து தாய்...
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே 
தன் சேலை உருவி 
தடுப்புச்சுவர் தந்தாள்.. 
மரிக்கும் நிலையிலும்..
மனிதம் சொன்னாள்...
பரலோகம் செல்லும் நிலையிலும் 
பண்பாடு காத்தாள்.."

பாருக்கே பண்பாடு சொன்ன தமிழன்...
இனவெறியால் அழிந்த கொடுமையை..
நினைத்தாலே  நெஞ்சம் வேகுமே...

Saturday 16 May 2015

மே - 17
தோழர்.ஜெகன் பிறந்த நாள் 
வெற்றி விழாவில் வெற்றிச்சிரிப்புடன்
தோழர்.ஜெகன் 

NFTE  இளைஞர் தினம் 
உலகத் தொலைத்தொடர்பு நாள் 
அன்பு கொண்ட நெஞ்சினான்.
ஆற்றல் மிக்க அறிவினான்..
இனிமை கொண்ட நாவினான்.. 
ஈன்றவளை மிஞ்சும் கருணையினான்..
உறுதி கொண்ட கொள்கையினான்..
ஊக்கம் மிக்க மதியினான்.. 
எளிமை கண்டு இரங்குவான்..
ஏறு போல் நடையினான்..
ஐயம் போக்கும் தெளிவினான்..
ஒற்றுமை சொல்லும் வழியினான்..
ஓங்கு புகழ் நிறைந்தவனாம்...
ஜெகன் நாமம் போற்றுவோம்...
--------------------------------
சிறப்புக்கூட்டம் 
--------------------------------
18/05/2015 - திங்கள் - மாலை 5 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி.
--------------------------------------------------------------
தலைமை:          தோழர்.சுபேதார் அலி கான்

வரவேற்புரை:  தோழியர்.கார்த்திகா 
                                தோழர்.தமிழ்மாறன் 

நன்றியுரை:       தோழியர்.ஜூலி 

பங்கேற்பு : தோழர்கள்
  • லால் 
  • மாரி 
  • பூபதி
  • PLR 
  • முருகன் I 
  • முருகன் II
  • காந்திமதி 
  • அண்ணாமலை 

மற்றும் முன்னணித்தோழர்கள்...

தோழர்களே... வருக.. வருக...

Friday 15 May 2015

TTA  தேர்வுகளும் 
தீராத பிரச்சினைகளும் 

TTA  இலாக்காத்தேர்வெழுத தகுதியுடைய 
131  தோழர்களின் பட்டியல் 
மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
நமக்கு அதுவல்ல  பிரச்சினை...
 98 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதுதான் நமது பிரச்சினை. 


55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எனக்கூறி 
9 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 
55 வயதிலே கதாநாயகனாகலாம்.. 
ஜனாதிபதியாகலாம்.. பிரதமராகலாம்... முதல்வராகலாம்.. 
TTA மட்டும் ஆக முடியாதாம்...

கல்வித்தகுதி இல்லாதவர்கள் எனக்கூறி 
65 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 
கல்வி மந்திரிக்கே கல்வித்தகுதி கேட்காத நாடு இது.. 
பாவப்பட்ட போன்மெக்கானிக் மட்டும் தகுதியோடு இருக்க வேண்டுமாம்.

கல்வித்தகுதி இருந்தும்.. அது குறிப்பிட்ட தேதியில் 01/07/2014 அன்று இல்லை என்று சொல்லி 3 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுதான் கொடுமையிலும் கொடுமை.  
ஓட்டப்பந்தயத்தின் அன்று உடல் தகுதி இருந்தால் போதாதா?

கல்வித்தகுதி இருந்தும்.. வயது இருந்தும்..
குறிப்பிட்ட போன் மெக்கானிக் சம்பளவிகிதத்தில் இல்லை என்று கூறி ஒரு தோழரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
TTA  பதவிக்கு அறிவும் திறமையும் ஆர்வமும் போதாதா?  
குறிப்பிட்ட சம்பளம் வேறு வேண்டுமா?

போன்மெக்கானிக் சம்பள விகிதத்தில்..
தொடர்ந்து 5 ஆண்டுகள் சேவை இல்லை என்று காரணம் சொல்லி 
20 தோழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.  
இவர்களுக்கு வேண்டிய கல்வித்தகுதி உள்ளது. 
5 ஆண்டுகளுக்கு மேல் இலாக்கா சேவை உள்ளது. 
குறிப்பிட்ட வயது வரம்புக்குள்ளும் இருக்கின்றார்கள். 
குறிப்பிட்ட சம்பள விகிதத்திலும் இருக்கின்றார்கள்...
ஆனாலும் குறிப்பிட்ட சம்பள விகிதத்தில் 5 ஆண்டு சேவை இல்லை என்று சொல்லி நிராகரிப்பது மிகப்பெரிய அபத்தமாகும். 

பழைய காலங்களில் இலாக்காவில் நுழைந்து  
3 ஆண்டு சேவை முடித்து..
QPC என்னும் அரை நிரந்தரம் பெற்றவர்கள் பலர் 
இயக்குனர், எழுத்தர், செம்மையர்  மற்றும்  JAO தேர்வு எழுதி 
இன்று ஆகப்பெரிய அதிகாரிகளாகவும்  இருக்கின்றார்கள். 
ஆனால் சாதாரண TTA  பதவிக்கு ஆயிரம் நிபந்தனைகளை விதிப்பது மிகப்பெரிய மனக்கொதிப்பை ஊழியர்களிடம்  உருவாக்கியுள்ளது. 

அன்று...
எத்தனை.. எத்தனை மாற்றங்கள்..
இன்று....
எத்தனை.. எத்தனை ஏமாற்றங்கள்... 

குப்தா என்னும் மாமனிதன் இருந்திராவிட்டால்.. 
குப்பையிலே பல தோழர்கள் கிடந்திருப்பார்கள்...

அன்று நடத்தப்பட்ட தேர்வுகளை..
ஆயிரம் ஆயிரம் தோழர்கள் பதவி உயர்வு பெற்ற 
அற்புதக் கண்கொள்ளாக்காட்சியை.. 
எண்ணி எண்ணி இன்புறுகிறோம்...
இன்றைய கையறு நிலையையும்..
எண்ணி எண்ணி ஏமாற்றம் கொள்கின்றோம்.. 

இன்றைக்கும் பல தோழர்களிடம்.. 
பதவி உயர்வுக்கான தகுதியும் திறமையும் தாகமும் உள்ளது..
ஆனாலும்...
விதிக்கப்படும் நிபந்தனைகளைக் கண்டு 
விதியை நொந்து ஊழியர்கள் புலம்புகிறார்கள்...

இனி..
விதியை நொந்து பலனில்லை...
பாதிக்கப்பட்ட தோழர்கள் 
சட்ட விதியை நம்பி 
வழக்கு மன்றம் செல்வதைத் தவிர வழியில்லை...

RR என்பது யாராலும் மாற்றப்பட முடியாத பைபிள் அல்ல...
நீதிமன்றம் பதவிக்கு பாதகம் செய்யாது...
உயர்வுக்கு ஊறு விளைவிக்காது... 
நமது இன்றைய  அனுபவம்...
நம்பிக்கையோடு செல்வோம்.. தோழர்களே...

Thursday 14 May 2015

JCM கூட்டாலோசனைக்குழு  
தேசியக்குழுக் கூட்ட முடிவுகள்
================================= 

நமது JCM தேசியக்குழுக்கூட்டம் 14/05/2015 
அன்று டெல்லியில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.

  • 22/07/1997 முதல் 08/09/2000 வரையிலான DOT காலத்தில் நடத்தப்பட்ட இலாக்காத் தேர்வு முடிவுகளை   SC/ST  தோழர்களுக்கு தளர்த்தி வெளியிடுவது சம்பந்தமாக DOPT  ஆள் மாகாண இலாக்காவிடம் வழிகாட்டுதல் கேட்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலைப் பொறுத்து முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

  • BSNL  வழங்கும் 60:40 ஓய்வூதியப்பங்களிப்பை நிறுத்துவது சம்பந்தமாக BSNLலின் நிலையை வலியுறுத்தி DOTக்கு மேலும் கடிதங்கள் எழுதப்படும். DOT அதிகாரிகள் சாதகமாக உள்ள நிலையில் பிரச்சினை தீர வாய்ப்புள்ளது.

  • BSNL MRS மருத்துவத்திட்டத்தை மேம்படுத்துவது  சம்பந்தமாக தனி குழு அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். 

  • 30/09/2000க்குப்பின் TM ஆகப்பணி நிரந்தரம் பெற்ற TSM தோழர்கள் பலருக்கு BSNLலில் பணி நியமன ஆணை PRESIDENTIAL ORDER வழங்கப்படவில்லை. இது வரை மாநிலங்களில் இருந்து வந்துள்ள விண்ணப்பங்கள் DOTயின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

  • மாநில அளவில் WORKS COMMITTEE அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.  மாவட்டங்களில் தொடர்ந்து பணிக்குழுக்கூட்டம் நடத்த அறிவுறுத்தப்படும்.

  • ஊதிய தேக்கநிலை STAGNATION மற்றும் நாலு கட்டப்பதவி உயர்வால் வந்த ஊதிய இழப்பு ஆகிய பிரச்சினைகள் மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு DOT  ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

  • மகளிர் வன்கொடுமை தடுப்புக்குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற ஊழியர் தரப்புக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது அதிகாரிகள் மட்டத்தில் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

  • MTNL பகுதிகளில் பணி புரியும் BSNL ஊழியர்களுக்கு ரூ.200/= இலவச பேசும் வசதி அளிப்பது  பற்றி சாதகமாக முடிவு செய்யப்படும்.

  • அந்தமான் பகுதிக்கு  சக்தி வாய்ந்த அலைவரிசை  வசதியை புதிய செயற்கைக்கோள்  மூலம் அளிப்பது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  • அந்தமான் பகுதிகளில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை சரி செய்யும் பொருட்டு TTA  கேடரில் புதிய ஆளெடுப்பு நடத்தப்படும்.

  • நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புற வீட்டு வாடகைப்படி வழங்குவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது மத்திய அரசின் முடிவையொட்டியே அமுல்படுத்தப்படும்.

  • காலியாக உள்ள குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவது சம்பந்தமாக மேலும் விதிகளை தளர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும்.

  • நக்சலைட் பகுதிகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளும் படிகளும் வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

தோழர்களே....
மிக நீண்ட தாமதத்திற்குப் பின் நடத்தப்பட்ட 
JCM தேசியக்குழுக்கூட்டத்தில்
ஆகட்டும் பார்க்கலாம் என்ற பாணியிலேயே
பல பிரச்சினைகள் கையாளப்பட்டுள்ளன. 
தலமட்டங்கள்  முதல்  தலைமை மட்டங்கள் வரை
கூட்டு ஆலோசனைக்குழு கூட்டங்கள்
பெயரளவுக்கே நடத்தப்படுகின்றன. 
இந்நிலை மாற வேண்டும்.  
நியாயமான ஊழியர் பிரச்சினைகள் 
உரிய முறையில் பேசித்தீர்க்கப்பட வேண்டும் 
என்பதுவே ஊழியர்  எதிர்பார்ப்பு.

Wednesday 13 May 2015

உழைத்த செல்வங்கள் 
உருக்குலையும் நிலை பாரீர்...

முல்லைக்கு தேர் கொடுத்தவன் பாரி
புற்றுக்கும்  புகலிடம் கொடுத்தது  BSNL 

கேட்டாலும் கிடைக்காத செல்வங்கள்
கேட்பாரின்றி கிடக்கும் காட்சி 

இரும்பாகி நின்றேன் நான்
விரைவில் BSNL போலவே...
துரும்பாகிப்  போவேன் நான்..


பேருக்கு  அமர்ந்த பலருக்கு 
PAY - சம்பளம் 
தந்த  நாற்காலிகள்
பேரிச்சம்பழத்திற்கும் நாதியற்ற நிலை காணீர்...

கோபுரங்கள் நாங்கள்
சாய்ந்து விட்டோம்.. சரிந்து விட்டோம்...

உங்கள் நிறுவனம் போலவே..

தோழர்களே...
நீங்கள் கண்ட காட்சி 
காணக்கிடைக்காத கண்காட்சியல்ல...
காணக்கூடாத கடுங்காட்சி...
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் 
கண்ணால் நாம் நித்தமும் காணும் காட்சி...

நாம் தேடிய செல்வங்கள் 
நலிந்து கிடக்கும் நிலை கண்டு 
நம் நெஞ்சம் பதறுகிறது...

பல பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் 
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா  என்ற 
பட்டுக்கோட்டையின் பாடல் வரிகளும்...

புன்னகையும் இன்னிசையும் ஒளிந்து போனதோ?
இன்னலோடு கண்ணீரும் உப்பாகிப் போனதோ? என்ற 
பாரதியின் பாடல்களுமே நம் நெஞ்சில் ஒலிக்கின்றன...

Tuesday 12 May 2015

E...R...P... 
 சாத்தான் எழுதிய வேதம் 
CODEX GIGAS 
சாத்தான் எழுதிய வேதம் என்று சொல்லப்படும்
CODEX GIGAS என்னும் நூலைக்
கண்ணால் பார்த்தவர்கள் கஷ்டத்திற்கு ஆளானார்கள்.  
தொட்டுப்பார்த்தவர்கள் தொடர் நோயில்  துன்பப்பட்டார்கள்.  
படித்தவர்கள் மரித்தார்கள்.  
உலகின் எட்டாவது துயரம் என்று பேசப்பட்டது அந்நூல். 

இன்று BSNLலில்... 
ஊழியர்களின் துயரமாக ERP உள்ளது. 
ERP என்ற சைத்தான் எழுதிய வேதத்தால்  
ஊழியர்கள் பட்ட வேதனைகள்  
ஒன்றா.. இரண்டா.. எடுத்துச்சொல்ல...


  • சென்ற மாதம் ERPயில் GPF விண்ணப்பித்திருந்தும் PRINT OUT அச்சுத்தாள் வரவில்லை என காரணம் சொல்லி காரைக்குடியில் ஏறத்தாழ 20 GPF விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பங்களை நிராகரிக்கும் அதிகாரத்தை கணக்கு அதிகாரிகளுக்கு யார் வழங்கியது என்பதுதான் புரியவில்லை.  இம்மாதம் பல ஊழியர்கள் குழந்தைகளுக்கு  கல்விக்கட்டணம் கட்ட வேண்டிய நிலை. பெரும்பகுதி ஊழியர்கள் கிராமப்புறங்களிலும்,  தொலை தூரங்களிலும் பணி புரிகின்றார்கள்.  பல ஊழியர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். 15ந்தேதி ERPயில் விண்ணப்பித்தாலும் உடனடியாக கணக்கு அதிகாரியிடம் PRINT OUT வந்து சேராது. இந்நிலையில் இம்மாதமும் PRINT OUT   வராவிட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என  சாத்தானின் வேதம் ஓதப்படுகிறது.  அவ்வாறு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால்  பாதிக்கப்பட்ட ஊழியர்களை திரட்டி மாவட்ட அலுவலகத்தில் மறியல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அன்போடு நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டக்  கடமைப்பட்டுள்ளோம்.

  • நமது சம்பளப் பட்டியலில் வருமான வரிப்பிடித்ததைப்   பார்க்கும்போது நெஞ்சம் பற்றி எரிகின்றது. நிதியாண்டின் கடைசி மாதங்களில்தான் வருமான வரிப்பிடித்தம் கூடுதலாக இருக்கும். இங்கோ வருடத்தின் ஆரம்பத்திலேயே கொடுமை துவங்கி விட்டது. வீட்டுக்கடன்... வீட்டு வாடகை.. தனிப்பட்ட சேமிப்புக்கள்... மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விலக்கு.. என எதுவுமே நமது ERP என்னும் சாத்தானின் வேதத்தில் கண்டு கொள்ளப்படவில்லை.

  • ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றே விடுப்புச்சம்பளம் LEAVE SALARY வழங்கபட்டு வந்தது. சாத்தானின் வேதத்தில் விடுப்புச்சம்பளம் ஓய்வு பெறும் அன்றே வழங்க முடியாதாம். அடுத்த மாதம் நிரந்தர ஊழியர்களுக்கு சம்பளம் போடும்போதுதான் வழங்கப்படுமாம்.

  • இறந்து போன ஊழியர் குடும்பங்களின் நிலை இன்னும் பரிதாபம். அக்டோபர் 2014ல் இறந்த அழகன்குளம் சீனி என்பவரது குடும்பத்திற்கு இன்னும் விடுப்புச்சம்பளம் வழங்கப்படவில்லை. சாத்தானின் வேதத்தில் சீனியின் குடும்ப விவரம்.. வறுமை நிலவரம்   இன்னும் ஏறவில்லையா என்பது தெரியவில்லை. 

  • வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணி புரியும் தோழர்கள் வங்கிகளுக்கு சென்று பணத்தைச் செலுத்துவதற்காக  போக்குவரத்துப்படி வழங்கப்படுகின்றது. சாத்தானின் வேதத்தில் இப்படியை.. எப்படி வழங்குவது என்பது முறைப்படி குறிப்பிடப்படவில்லையாம். எனவே காசாளர்கள் ஏறத்தாழ       10மாதமாக  இலவச சேவையை இலாக்காவிற்கு அளித்துக்கொண்டுள்ளனர்.

தோழர்களே...
ERP என்னும் இந்த சாத்தானின் வேதத்தால் 
நாம் படும் துன்பங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.. 
மாவட்டத்தில் பணி புரியும் அதிகாரிகள் 
கூலாக மாநிலத்தைக் கைகாட்டுவதும்.. 
மாநில அலுவலகத்தில் தொலைபேசியை தொடாமல் இருப்பதும்...
நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது...
வெறும் ஆர்ப்பாட்டங்களும்.. 
அம்பலப்படுத்துதலும்..
சாத்தானின் வேதத்தை சரி செய்து விடாது...
 
உறுதியான போராட்டம்...
ஒன்றுபட்ட போராட்டம்..
தலமட்டங்களில் போராட்டம்...
தலைநகரில் போராட்டம்....
இதுவே...
சாத்தானை அசைக்கும் சாத்தியக்கூறாகும்..
தயாராவோம் தோழர்களே...

Monday 11 May 2015

வாழ்க... வளைக.. 

காசு பணத்திற்கு கடுகளவும்...
அடிபணியாத நீதித்தராசு..
அண்ணல் காந்தி படம் போட்டதனால் 
அடி பணிந்து விட்டது போலும்...

எத்தனை நாள்தான்.. 
நிமிர்ந்து நிற்கும் நீதித்தராசு..

நீதி எப்போதாவது வெல்லும்.. 
நிதி எப்போதும் வெல்லும்..
நியாயம் புரிந்தது..
நம் நீதித்தராசு..

நெடிலாக இருந்த நீதித்தராசு..
குறிலாக மாறி குதூகலம் கொண்டது...
வாழ்க... வளைக.. நீதித்தராசு..

Sunday 10 May 2015

முழு ஓய்வூதியம் 
நீதிமன்றத்தீர்ப்பு 

ஏசுபிரான் 33 ஆண்டுகள்  உயிர் வாழ்ந்தார்  என்பதனால் 
33 ஆண்டுகள் சேவையே முழுமையான பணி என்று 
அன்றைய ஆள்வோர்களால் நிர்ணயம் செய்யப்பட்டு..
மத்திய அரசுப்பணிகளில் 33 ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டுமே 
முழுமையான  ஓய்வூதியம் வழங்கப்பட்டு  வந்தது. 

மத்திய அரசு ஊழியர்களின் தொடர் வலியுறுத்தலால் 
20 ஆண்டுகள் பணி புரிந்தால் 
முழுமையான ஓய்வூதியம் வழங்கப்படும் என 
ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை செய்தது. 
அந்த முடிவு 01/01/2006 முதல் அமுல்படுத்தப்பட்டது.
ஆனால் 01/01/2006க்கு முன் ஓய்வு பெற்று 
33 ஆண்டு கால பணி நிறைவு செய்யாத  தோழர்கள் 
குறைவான ஓய்வூதியம் பெற்று வந்தனர்.
அவ்வாறு பாதிப்புக்குள்ளான தோழர்கள் 
வழக்கு மன்றம் சென்றனர். 
தற்போது இந்த வழக்கில் 
டெல்லி முதன்மை தீர்ப்பாயம் CAT  தீர்ப்பு அளித்துள்ளது.

அதன்படி 
01/01/2006க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களும் 
20 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் அவர்களுக்கும் 
முழுமையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என 
வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.

நமது பகுதிகளில்...
நீண்ட நாட்கள் மஸ்தூராகப் பணி புரிந்து 
வயது வரம்பு தளர்வு பெற்று.. 
RM ஆகப் பணி நிரந்தரம் பெற்று 
01/01/2006க்கு முன் ஓய்வு பெற்ற 
பல தோழர்களுக்கு இதன் மூலம் பலன் கிடைக்கும்...

20 ஆண்டுகள் பணி புரிந்தால் 
முழு ஓய்வூதியம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டாலும்..

இன்னும்...
33 ஆண்டுகள் பணி புரிந்தால்தான் 
முழுமையான பணிக்கொடை
GRATUITY  வழங்கப்படுகிறது.

இது ஓய்வு பெறும் மூத்த தோழர்களுக்கு 
இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்..

7 ஆண்டு 10 ஆண்டு மஸ்தூர் நிரந்தரத்தின் மூலம் 
பணி நிரந்தரம் பெற்ற தோழர்கள் பணி நிறைவு அடையும் காலமிது.
அத்தகைய தோழர்களுக்கு 33 ஆண்டு நிரந்தரப்பணி என்பது கிடையாது.
எனவே அவர்களுக்கு...
முழுமையான பணிக்கொடை கிடைக்க வாய்ப்பில்லை.

எனவே ஓய்வூதியத்தைப்போலவே..
முழுமையான  பணிக்கொடைக்கும் 
20 ஆண்டுகளே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்...

பணி ஓய்வு பெற்றவர்களும்...
பணியில் இருப்பவர்களும் 
இணைந்து குரல் கொடுக்க வேண்டிய நேரமிது...

Friday 8 May 2015

ஆம் மன்னா... ஆமாம் மன்னா...

மந்திரியாரே..
நமது தேசத்தில் மும்மாரி பெய்கிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

காலையில் கதிரவனும் மாலையில் முழுமதியும் உதிக்கிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

ஒப்பந்த ஊழியர்களுக்கு 7ம் தேதி சம்பளம் கிடைக்கிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

அவர்களுக்கு EPF மாதந்தோறும் கட்டப்படுகிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

அவர்களுக்கு ESI மருத்துவ அட்டை கண்ணில் காட்டப்படுகிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

தீபாவளிக்கு முன்னே போனஸ்  வழங்கப்படுகிறதா?
ஆம்... மன்னா... ஆமாம்... மன்னா...

நமது ராஜ்ஜியத்தில் அமைதிப்புறா பறக்கிறதா?
அது மட்டும் இல்லை மன்னா...
அது பறப்பதும் பறக்காததும்...
உங்கள் கையில்தான் உள்ளது.... மன்னா....
================================================================
ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினை சம்பந்தமாக 
மேல்மட்ட நிர்வாகம் கேட்கும் கேள்விகளுக்கும்  
கீழ்மட்ட நிர்வாகங்கள் சொல்லும் பதிலுக்கும் 
புலிகேசி - மந்திரி உரையாடலுக்கும் 
எந்த சம்பந்தமும் இல்லை என 
படிப்போர் தயவு செய்து நினைத்து விட வேண்டாம்..