Sunday 22 November 2015

வெளிச்சம் காணா வேர்கள்...

ஓரிரு தினங்களுக்கு முன்பு...
உள்ளூரில் நண்பன் ஒருவனின் 
அகால மரணத்திற்கு சென்று  விட்டு..
தோழர்களுடன் அரசுப்பேருந்தில்.. 
காரைக்குடி திரும்பிக்கொண்டிருந்தோம்...

வரும் வழியிலேயே... நமது தோழர் ஒருவருக்கு..

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் போல்...
குறைந்த ரத்த அழுத்தம் உருவாகி  உடல் நலிவு ஏற்பட்டு விட்டது...

உடனே.. திருவாடானை கிளைச்செயலர்..

தோழர்.பாலமுருகனிடம் தொடர்பு கொண்டோம்.
திருவாடானையிலேயே இறங்கி விடுமாறும்..
அங்குள்ள அரசு மருத்துவமனையில் 
சிகிச்சை பெறலாம் என்றும் சொன்னார்..

அரசு மருத்துவமனை என்றாலே பலருக்கு அலர்ஜிதான்....
ஆனாலும் ஆபத்தான கட்டமாக இருந்ததால்
திருவாடானையிலே இறங்கி விட்டோம்..
ஆட்டோவில் ஏறி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றோம்...
மருத்துவர் பணி முடித்திருந்தாலும்...
நமக்காகவே காத்திருந்தார்...
பாதிக்கப்பட்ட தோழரின் நாடித்துடிப்பை சோதித்தார்...
நாடித்துடிப்பே தென்படவில்லை என்றும் 
நாற்பதுக்கு கீழே போய்விட்டதென்றும் கூறி விட்டு
அவசர அவசரமாக முதலுவி சிகிச்சையில் ஈடுபட்டார். 

இரண்டு மருத்துவர்கள்... மூன்று செவிலியர்கள்...
கடமையுணர்வோடு செயல்பட்டு.. 
நாடித்துடிப்பைச்சீர்செய்து  நலம் பெற வைத்தனர்.

மருத்துவருக்கு நன்றி தெரிவித்தோம்..

அவர் சொன்னார்.. 
"நீங்கள் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டியதில்லை... 
இதோ  இவருக்கு நன்றி  செலுத்துங்கள் என்று..
நம் தோழர்  ஒருவரைக் குறிப்பிட்டுக் கூறினார்"

மருத்துவர்  மேலும் தொடர்ந்தார்.. 

"நான் பணி முடித்து வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன்..
மகாதேவன் போன் செய்து...
அவசரமாக எங்கள் தோழருக்கு  சிகிச்சை அளிக்க வேண்டும் 
என கேட்டுக்கொண்டதால் நான் காத்திருந்தேன்....
காரணம்... 
மகாதேவன்.. காலையும் மாலையும் 
அரசு மருத்துவமனைக்கு வந்து 
BSNL சேவை சரியாக உள்ளதா? என நித்தமும் 
எங்களை கேட்டு விட்டுத்தான் BSNL அலுவலகம் செல்வார்...
ஏதேனும் பழுது என்றால் பறந்து வந்து சரி செய்வார்...
இங்கு பழுது என்பது சில நிமிடங்களே இருக்கும்...
எனவே அத்தகைய கடமை உணர்வுள்ள 
ஒரு தோழர்.சொன்னதால்தான் 
நான் பணி முடித்தும்... 
மதிய உணவு உண்ணாத நிலையிலும் 
இங்கே காத்திருந்தேன்" என்று சொன்னார்.

அவர் அளித்த சிகிச்சையை விட 
அவரது பேச்சைக்கேட்டதும்... 
நமது நாடித்துடிப்பு உற்சாகமாக ஓடத்துவங்கியது...

தோழர்களே...

யார்? இந்த மகாதேவன்...
ஆறு இலக்கத்தில் சம்பளம் பெறும் அதிகாரியா?
ஐந்திலக்கத்தில் ஊதியம் பெறும் ஊழியரா?
SDEயா? JTOவா? TTAவா? போன் மெக்கானிக்கா?
இல்லை.. தோழர்களே...இல்லை...
அவர்... ஒரு ஒப்பந்த ஊழியர்...

மாதம் மூவாயிரம் மட்டுமே சம்பளமாகப் பெற்று 
சாதாரண வாழ்க்கை நடத்தும் அடிமட்ட ஊழியன்..
தன் இளம்பருவத்திலே இருந்து..
இங்கு பணி புரியும் சாதாரண மனிதன்...
ஆனாலும் கடமை உணர்வு தவறாமல்..
BSNL தழைக்க தன் உழைப்பை சிந்தும் தோழன்..

இவனைப்போன்றவர்கள்தான்...

இந்த நிறுவனத்தின் இன்றைய வேர்கள்...
இவர்கள் வெளிச்சம் காண்பதில்லை...
இவர்களின் வேதனைகள் யாருக்கும் புரிவதில்லை..
ஆனாலும் வேர்களாக நின்று 
இந்த நிறுவனம் தாங்கும் 
இவர்களை நெஞ்சாரா வணங்குகிறோம்...

தோழர்களே...
ஆதி இரத்தினேஸ்வரர் 
அருள் புரியும் திருவாடானையில்...
அரசு மருத்துவமனையின் அற்புதம் தெரிந்தது...
அடிமட்ட ஊழியனின் அர்ப்பணிப்பும் புரிந்தது...

அர்ப்பணிப்பு மிக்க...மகாதேவன் போன்ற 
வெளிச்சம் காணாத.. வேர்களின் விடியலைத்தான்..
தொடர்ந்து இங்கே தேடிக்கொண்டிருக்கின்றோம்...

5 comments:

  1. சுடும் நிஜம் ....மகாதேவனுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Congrats to Mr.mahadevan,keep it up....

    ReplyDelete
  3. Congrats to Mr.mahadevan,keep it up....

    ReplyDelete
    Replies
    1. தோழர் மகாதேவன் அவர்களுக்கு நம்து பாராட்டு ! இது போன்ற நல்ல ஊழியர்களால்தான் நமது நிறுவனம் இன்றும் ஜீவித்து வருகிறது

      எல் சுப்பராயன், கோவை

      Delete
  4. தோழர் மகாதேவன் அவர்களுக்கு கடலூர் TMTCLU சங்கத்தின் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.. BSNL-லில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் நிலையில் மாற்றம் வரும்...

    ReplyDelete