Monday 6 July 2015

 NFTE 
மாவட்டச்செயற்குழு தீர்மானங்கள் 

30/06/2015 அன்று  பரமக்குடியில்  நடைபெற்ற 
காரைக்குடி  மாவட்டச்செயற்குழு தீர்மானங்கள் 
==============================================================================

சேவையை செம்மைப்படுத்த போராட்டம் 

உரிய கவனம் செலுத்தப்படாததால் 
மாவட்டத்தின் பல பகுதிகளில் BSNL சேவை சீரழிந்து வருகிறது. குறிப்பாக இராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து நமது சேவை தடைப்பட்டு வருகிறது. பரமக்குடி, காரைக்குடி பகுதியில் பல நூறு வாடிக்கையாளர்கள் அகன்ற அலைவரிசை  இணைப்புக் கேட்டு மாதக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் நிர்வாகம் கண்டு கொண்டதாக தெரியவில்லை. 
CABLE இல்லை, PORT  இல்லை.. என்று  தாக்கல் சொல்லப்படுகிறது. எனவே  BSNL சேவையை செம்மைப்படுத்தக்கோரி இராமேஸ்வரத்தில் வாடிக்கையாளர்கள், வர்த்தக அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.
==============================================================================

 தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் தீர போராட்டம் 

காரைக்குடி மாவட்டத்தில் 
பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் தேங்கிக்கிடக்கின்றன. 

சென்ற நூற்றாண்டில் இருந்தே  (2000க்கு முன்பிருந்து ) 
பல தோழர்கள் விருப்ப மாற்றலில் காத்திருப்போர் பட்டியலில் காத்துக்கிடக்கின்றனர். காத்துக்கிடந்தே  இறந்தவரும் உண்டு.  
பணி ஓய்வு பெற்றவரும் உண்டு.  பல முறை நாம்  எடுத்துரைத்தும் அவர்களது உணர்வுகள் நியாயங்கள் 
நிர்வாகத்திற்கு உரைக்கவில்லை. 

தற்காலிகப் பதவி உயர்வில் JTOவாக பணி புரியும் TTA தோழர்களின் நிலுவை இன்னும் இழுவையாகவே உள்ளது. அவர்கள் AIBSNLOA சங்கத்தில் சங்கமித்து இருப்பதால் பிரச்சினை கிடப்பில் போடப்படுகின்றது. கணக்கு அதிகாரிகளின் AIBSNLEA சங்கத்தில் சேர்ந்திருந்தால் இந்நேரம் பிரச்சினை அகில இந்திய அளவிற்கு கொண்டு செல்லப்பட்டு ஆலோசனையும்  வழங்கப்பட்டிருக்கும்.. அரியர்சும் வழங்கப்பட்டிருக்கும்.  ஆனால் JTOவாக பணி புரியும் TTA தோழர்கள் 
NFTE உறுப்பினர்கள் என்பதை கணக்கு அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவர்களது நியாயத்திற்காக 
நாம் போராடுவது என்பது தவிர்க்க இயலாதது.

காசாளர்களாகப்  பணிபுரியும் தோழர்களுக்கு கடந்த ஒரு வருடமாக CONVEYANCE ALLOWANCE அலைச்சல் படி வழங்கப்படவில்லை. 
GPF முன்பணத்தை திருப்பிக்கட்டியவர்களுக்கு அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. பல்வேறு ஊழியர்களின் குடும்ப விவரங்கள் சரி செய்யப்படவில்லை. எத்தனை காலம்தான்  ERPஐ சொல்லிக் காலம் கழிப்பதோ?  நாமும் பொறுமை காப்பதோ?

பணி ஓய்வு பெற்றவர்கள்,  பரலோகம் சென்றவர்கள்,  பாவப்பட்டவர்கள் என பல தோழர்களின் நாலு கட்டப்பதவி உயர்வு  நாதியற்றுக்கிடக்கிறது. நாலு கட்டப்பதவி உயர்வு வழங்க கோரி 400 கட்டம் பேசியும் முட்டுக்கட்டைகள் விலகவில்லை. 
முடிவு காணாமல் நாமும் விடுவதுமில்லை.
==============================================================================

தறி கெடும் தலமட்ட நிர்வாகங்கள் 

காரைக்குடியில் பொது மேலாளர் இல்லாத காரணத்தினால் 
பல தலமட்ட அதிகாரிகள் தானடித்த மூப்பாக 
தடியெடுத்த போக்காக செயல்படும் நிலை உருவாகியுள்ளது. 

குறிப்பாக BSNLக்கு அதிக  வருமானம் தரும் பகுதியாக விளங்கிய இராமநாதபுரத்திலே தற்காலிகப் பதவி உயர்வில் SDE(INDOOR) 
ஆகப்பணிபுரியும் ஒரு JTO போடும் ஆட்டம் தாங்க  முடியாத நிலையில் உள்ளது. அலுவலக நேரத்தில் சம்பளம் கொடுக்கும் BSNLக்கு உழைப்பதை விடுத்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் பகுதி நேர வகுப்பு எடுப்பது, சொந்த கணிணி மையங்களை நிறுவி அவற்றைக் கண்காணிப்பது, நியாயமாக நேர்மையாகப் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டுவது, நான் மெத்தப்படித்தவன் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று இறுமாப்புடன் பேசுவது, இலாக்கா கொடுத்த செல்போனில் யாருக்கும் பதில் பேசாதது, அவரது உயர் அதிகாரியான DE சொல்லுவதை மறுதலிப்பது, ஊழியர்  சங்கங்களை  இழிவாகப் பேசுவது என்று  தொடரும் அவருடைய வெங்கடேச லீலைகளை நாம் வெகு காலம் பொறுக்க முடியாது. நிர்வாகம் உடனடியாக தலையிட்டு 
இராமநாதபுரம் போன்ற பாமரர்கள் 
நிறைந்த பகுதியில் இருந்து அவரை விடுவித்து, 
முதுகுளத்தூர் போன்ற படித்தவர்கள் நிறைந்த பகுதிக்கு   
பணியிட மாற்றல் செய்து BSNLஐயும் 
மெத்தப்படித்த அவரையும்  காக்க  வேண்டும். 
==============================================================================

வேண்டுகோள்

தற்போது திருச்சி பொதுமேலாளர் காரைக்குடிமாவட்டத்திற்கு
 கூடுதல் பொறுப்பாக செயல்படுகின்றார்.  ஏப்ரல் மாதம் JCM கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. ஏப்ரல்,மே,ஜூன்,ஜூலை என்று நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. மீண்டும் அவரைக்காணும் வாய்ப்பு எப்போது என்று ஊழியர்கள் ஏங்கித்தவிக்கின்றனர். 

தீபாவளிக்குள் அவரைக்காண வேண்டும்.. 
தீராத பிரச்சினைகள் தீர வேண்டும் என்று
 மாவட்ட செயற்குழு 
மனம் உருகி வேண்டுகோள் விடுக்கிறது.

No comments:

Post a Comment