Sunday 22 March 2015

அவன்தான் மனிதன் 
மார்ச்  23
மாவீரன் பகத்சிங் 
நினைவு நாள் 
1931 மார்ச் 22...
லாகூர் சிறை அதிகாரி தோழர். பகத்சிங்கை சந்திக்கிறார்.
பகத்சிங் அமைதியாக "அரசும் புரட்சியும் " என்ற 
தோழர் லெனின் எழுதிய புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கிறார்.
"உங்களுக்கு மார்ச் 24 தூக்குத்தண்டனை..
உங்களது இறுதி ஆசை என்ன? என்று சிறை அதிகாரி கேட்கிறார்.

"நான் பிபியை சந்திக்க வேண்டும்..
அவர்கள் கையால் உண்ண வேண்டும்"  என்கிறார் பகத்சிங்.

பிபி என்றால் பஞ்சாபி மொழியில் வளர்ப்புத்தாய் என பொருள்.

"உங்கள் வீட்டிற்கு சொல்லி அனுப்புகிறேன்" 
என சிறை அதிகாரி கூறுகிறார்.
"வீட்டிற்கு வேண்டாம்... 
பிபி இங்கேதான் இருக்கின்றார்கள்" என்கிறார் பகத்சிங்.
இங்கேயா? என ஆச்சரியத்துடன் கேட்கிறார் சிறை அதிகாரி...
ஆம்.. இங்கே துப்புரவுத்தொழில் செய்யும்
போகாவைத்தான் நான் சந்திக்க விரும்புகிறேன் என்கிறார்...

போகா என்னும் பெயருடைய 
சிறையில் துப்புரவுப்பணி செய்யும் 
பெண்மணி அழைத்து வரப்படுகிறார்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை...
பகத்சிங்கைப் பார்த்து கேட்கிறார்...
"நீங்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காகப் போரிடுபவர்...
உங்களை பார்ப்பதே எனக்குப்பெருமை...
இந்த எளிய பெண் உங்களுக்கு என்ன செய்ய இயலும்...
மேலும் என்னை வளர்ப்புத்தாய் என கூறியுள்ளீர்கள்...
என்னால் எதனையும் புரிந்து கொள்ள முடியவில்லை" என்கிறார்.

பகத்சிங் அவரைப் பார்த்து
" அன்னையே... 
நான் குழந்தையாக இருந்தபோது 
எனது தாய் எனது மலத்தை எடுத்து சுத்தப்படுத்தினார்.
இப்போது... இந்த சிறையில்...
எனது மலத்தை நீங்கள்தான் சுத்தப்படுத்துகின்றீர்கள்..
எனவே எனது தாய்க்குப்பின் 
நீங்களே எனது வளர்ப்புத்தாய்"
என்று கூறுகின்றார்..

மேலும் அவரைப்பார்த்து 
" இந்த வளர்ப்புத்தாயின் 
கையால் சமைத்த உணவை 
நான் உண்ண வேண்டும்... 
இதுவே எனது இறுதி ஆசை
என்றும் கூறுகிறார்.

கேட்டதும்.. 
கண்ணீர் பெருக்கெடுக்கிறது போகாவுக்கு...
"நிச்சயம் நாளை மாலை 
உணவுடன் உங்களை  சந்திக்கிறேன்" என 
உள்ளம் பொங்கிய உணர்வுடன் கூறிச்சென்றார்.. போகா..

1931 மார்ச் 23 மாலை...
கையில் உணவுடன்..
கண்ணில் ஈரமுடன்..
தனது பணிக்கு சிறைக்கு வந்தார் போகா..

பகத்சிங் இருந்த சிறைக்கதவு திறந்து கிடந்தது...
அன்று காலையே அவர் தூக்கிலிடப்பட்டார்...
காலம் நேரம் தவற மாட்டோம் என்று கூறும் கயவர்கள்... 
ஒருநாள் முன்னதாகவே பகத்சிங்கை தூக்கிலிட்டனர்...

செய்தி கேட்டவுடன்...
உணவுப்பாத்திரமுடன் 
உணர்வற்று விழுந்தார் போகா...

அன்று லாகூர் சிறையை 
போகா தண்ணீரால் கழுவவில்லை..
தனது கண்ணீரால் கழுவினார்..

அடிமை விலங்கொடிக்க இன்னுயிர் நீக்கும்  நிலையிலும்..
அடித்தட்டுப்  பெண்மணியிடம் 
அன்பு செலுத்தி...
அன்னையாய் அவரை நெஞ்சில் வரித்து...
அன்புடன் உணவு கேட்ட...
அவன்தான் மனிதன்... 
அவன்தான் மாவீரன்..
அவன் நினைவைப்போற்றுவோம்..
அவன் பாதையில்  என்றும் பயணிப்போம்...

No comments:

Post a Comment