Sunday 25 January 2015

திருவாளர். குடியரசு...
 26/01/1950
திருவாளர். குடியரசு...
சாய்வு நாற்காலியில்...
தலை சாய்ந்து கிடக்கிறார்..
அவருக்கு  வயது இன்றோடு 66...

பாவம்.. பெரியவர்.. குடியரசு..
நாட்டு நடப்பை பார்த்து பார்த்து..
நெஞ்சு  வலிச்சுப்போச்சு..

சாதி சமய சண்டையைப் பார்த்து..
சர்க்கரை ரொம்ப ஏறிப்போச்சு...

மதவாதக்கல் அடைச்சு..
சிறுநீரகம் செயலிழந்து போச்சு...

ஏழை படும் பாட்டை பார்த்து..
இரத்தம்  கொதிச்சுப்போச்சு...

பங்கு விற்பனைக் காய்ச்சல் வந்து..
படுக்கையிலே மல ஜலம் போச்சு... 

லஞ்ச ஊழல் பேயடிச்சு..
புத்தி மொத்தமா  பேதலிச்சுப் போச்சு ..

குலவழிச்  சொத்தைக் கூவிக்கூவி 
பிள்ளைகளும்.. பேரன்களும்... விற்பதாலே..

குந்தவும்  ஒரு இடம் இன்றி...
குடிக்கவும் குவளைத்  தண்ணீ ர் இன்றி..

சாய்வு நாற்காலியில்..
தலை சாய்ந்து கிடக்கிறார்..
திருவாளர். குடியரசு...

தந்தை காந்தி..
அண்ணல் அம்பேத்கார்..
அன்பு கொண்ட மாமா நேரு.. 
அவரது மகள்  இந்திரா..
உயிரைக்கொடுத்து தேசம் காத்த தோழர்கள்... 
எல்லோரும் அவர் நினைவில் 
வந்து வந்து போகிறார்கள்..

அவர்கள் நினைவில் வாழ்ந்து..
அருமை உயிரைக் கையில் பிடித்து..
தர்மராஜனுக்கு தாக்கல்  சொல்லி....
தலை சாய்ந்து கிடக்கிறார்...
சாய்வு நாற்காலியில்.. 
திருவாளர். குடியரசு...

ஐந்தாண்டுக்கு ஒருமுறை.. 
அனுபவமற்ற மருத்துவர்கள்..
மாற்றி.. மாற்றி.. 
மருந்துகளை  கொடுப்பதாலே..
நோய் தீர வழியின்றி 
நொந்து கிடக்கின்றார்..
திருவாளர்.குடியரசு...

உள்ளூர் மருத்துவர்கள்.. 
உபயோகமற்றுப் போனதாலே...
உயரமாய் ஒரு மருத்துவர்..
அமெரிக்காவிலே இருந்து..
அவசரமாக வருகிறாராம்...

அவர் வந்து போன பின்பாவது...
எழும்புவாரா? குடியரசு..
மீண்டும்  பழைய நிலைக்கு 
திரும்புவாரா? குடியரசு..

துக்கம் தொண்டை அடைக்க..
துயரம் நெஞ்சைக்கவ்வ...
தவித்து நிற்குது...
அவர் மேல் பாசம் கொண்ட 
பாரத நாட்டுப்பிள்ளைகள்...

No comments:

Post a Comment