Sunday 12 January 2014

                     நிலவு ஈன்ற நெருப்புக்குழந்தை 
                                      கவிஞர் - பேராசிரியர் - முனைவர் 
                                                             மு. பழனி இராகுலதாசன் 

கடவுளைப் பார்த்தீர்களா? என்பது கேள்வி..
"பார்த்தேன்" என்பது பதில்..

"எப்படிப்பார்த்தீர்கள்?"  
என்பது அடுத்த கேள்வி..
நீ என்னைப் பார்ப்பது போல்..
என்பது அடுத்த பதில்..
உரையும் முடிந்தது... 
திரையும் விலகியது

இப்படித்தான்..
இந்திய வரலாற்றில்
நிலவொன்று
நெருப்புக்குழந்தையை
ஈன்று தந்தது..
அப்புறம்?..
அப்புறம் என்ன..
ஆட்டம் தொடங்கியது..

என்ன ஆட்டம்?
"நெருப்புச்சக்கரம் சுழலும் ஆட்டம்"
"நான்தான் பெரியவன்"
"நீதான் சிறியவன்"
என்று பலரும் பேசிக்கொண்டிருந்த
சீக்குப்பிடித்த சிகாகோ நகரில்
சீறிப்பாய்ந்தது
சிங்கக்குட்டி..
தவளைக்கதையை
அவையில் சொல்லி
அடக்கி ஆண்டது..

தவளைச்சத்தம்
அடங்கிய பின்னர்
நெருப்புச்சக்கரம் 
தெருவுக்கு வந்தது..
"விதவைப் பெண்ணுக்கு
வாழ்க்கை தராத
மதமெனும்
பேயை கடலில் எறி"!..
என்று முழங்கியது..

கூனல் என்பதும்..
குருடு என்பதும்..
உயர்வு என்பதும்..
தாழ்வு என்பதும்..
மனிதரில் இல்லை..
"நிமிர்ந்து நட"
"நேர்படப்பேசு"
ஆதியில் இல்லாச் சாதியை
எவனோ பாதியில் கொணர்ந்தான்
அனைவரும் அந்தணர்
என்று புதிதாய்
விதியொன்று சமைப்போம்"
என்று முழங்கி
நெருப்புச்சக்கரம்
 நீளச் சுழன்றது..

நாலாம் நிலையெனக் 
கீழே தள்ளிய தோழன் 
அவனைத்தோளில் தாங்கி
"ஆட்சியில் அமர வைப்பேன்:
அது வரை நானும் 
ஓய்ந்திட மாட்டேன்
என்று சுழன்றது

நாடுகள் இருக்கலாம்..
எல்லைக்கோடுகள் எதற்கு?
மொழிகள் இருக்கலாம்..
வேறு பாடுகள் எதற்கு?
மதங்கள் இருக்கலாம் 
வெறுப்புப் பதங்கள் எதற்கு?

நிலவு ஈன்ற நெருப்புக்குழந்தை
இப்படித்தான்
எழுப்பியது கேள்விகள்..

நெருப்புக்குழந்தை
சுழலச்சுழல..
சுழன்றது பாரதம்..

மேலே மேலே

வளர்ந்தது பாரதம்..


(12/01/2014 - காரைக்குடி NFTE   சங்க அலுவலகத்தில்
சுவாமி விவேகானந்தர் பிறந்த தின விழாவில் வாசித்தளித்த கவிதை )

1 comment:

  1. தொடரட்டும் இது போன்ற நிகழ்வுகள் ...நல்லதை யாரும் எடுத்து சொல்வதில்லை இப்பொழுது எனும் குற்றச்சாட்டு அகல ...எடுத்துக்கொண்ட முயற்சி தொடரட்டும்

    ReplyDelete