Monday 30 September 2013

BROAD BAND
அரசு ஊழியர் 20 சத சலுகை வெட்டு 

மத்திய மாநில அரசுத்துறைகளில்  மற்றும் பொதுத்துறைகளில் 
பணி புரியும் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 
BROAD BAND மற்றும் WI MAX சேவைகளில் 
20 சத தள்ளுபடி அளிக்கப்பட்டு வந்தது. 

தற்போது தள்ளுபடி 10 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.  
FTTH இணைப்புக்களுக்கும் 10 சத தள்ளுபடி பொருந்தும்.

இது 01/10/2013 முதல் அமுலுக்கு வருகின்றது.

BSNLன் உதய தினத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பதற்குப்பதிலாக 
வெட்டுக்களை அறிவித்துள்ளது வெறுப்பிற்கு வழி வகுக்கும்.
அக்டோபர் - 1 
BSNL 
உதய தினம் 

கருகத் திருவுளமோ..?
என்ற கவலை கொல்வோம்..
காத்து நின்றிட.. உறுதி கொள்வோம் 
அக்டோபர்  IDA

நுகர்வோர் விலைவாசி குறியீட்டெண் 
உயர்வின் அடிப்படையில் 
01/10/2013 முதல் 

IDA  6.6 சதம் 

உயரும் என்று தெரிகின்றது.

Sunday 29 September 2013

வாழ்த்துக்கள் 

இன்று 30/09/2013 
பணி நிறைவு பெறும் 
தங்கமான அம்மாள் 

தோழியர். 
P.தங்கம்மாள் 
TM/காரைக்குடி 

 அன்புத் தோழர் 
NS. சந்திரமோகன் 
SDE/பரமக்குடி

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்  
சிறப்புடன் விளங்க 
நமது அன்பான வாழ்த்துக்கள்.

Friday 27 September 2013

JAO தேர்வு  
தேறியும்.. தேறாதோர்...

 2006/2009/2012 ஆகிய வருடங்களுக்கான JAO காலியிடங்களுக்கு தேர்வெழுதி தேவையான மதிப்பெண்களை பெற்றிருந்தும் போதிய  காலியிடங்கள் இல்லாத காரணத்தால் பல தோழர்கள்  
JAO பதவி உயர்வை அடைய முடியவில்லை.

JAO  பதவி என்பது அகில இந்திய கேடரில் இருந்து மாநில கேடராக ஆக்கப்பட்டதால் வந்த பிரச்சினை இது. தற்போது CORPORATE அலுவலகம் மேற்கண்டவாறு JAO தேர்வில் தேர்ச்சியடைந்தும்  காலியிடங்கள் இல்லாததால் பதவி உயர்வுக்கு செல்ல இயலாத தோழர்களின் விவரங்களை மாநில நிர்வாகங்களிடம் கேட்டுள்ளது.   
அக்டோபர் 3க்குள் மாநில நிர்வாகங்கள் பதில் தர வேண்டும்.

JAO தேர்வில் தேறியும் தேறாத  
தோழர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு காத்திருக்கின்றது... 

Thursday 26 September 2013

அவதி தரப்போகும் 
அலைக்கற்றை கட்டணம் 
( BWA - BROADBAND WIRELESS ACCESS CHARGES  REFUND)

12/09/2013 அன்று கூடிய  மந்திரிகள் சீரமைப்புக்குழு 
BWA அலைக்கற்றைக்கட்டணமாக BSNL/MTNL நிறுவனங்கள் செலுத்திய 11000 கோடியை திருப்பி அளிப்பது என முடிவு எடுத்தது அறிந்ததே. 
இதில் BSNL  பங்காக 6725 கோடி கிடைக்கும். இந்த 6725 கோடி பண வரவால் போனஸ்,மெடிக்கல், LTC திரும்ப கிடைக்கும் என தோழர்கள் கனவில் உள்ளனர்.  ஆனால் நமது கவலை வேறாக உள்ளது.

நமது BSNL நிறுவனம்  மக்களுக்கு புதிய சேவைகளை அளிப்பதற்காக DOTயிடம் 2007/2008ம் ஆண்டுகளில் 20MHZ/2.5 GHZ அலைவரிசை வேண்டும் என விண்ணப்பித்திருந்தது. இதன் அடிப்படையில் 2008ம் ஆண்டு  2.5/2.69 அலைவரிசை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் நமக்கு வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள் எடுத்த அதிக பட்ச விலைக்கே நமக்கும் BWA அலைவரிசை ஒதுக்கப்பட்டது.  இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு நமது நிறுவனத்திற்கு எந்த பலனையும் அளிக்கவில்லை. போட்ட முதலீட்டை எடுக்கவே ஆண்டுகள் பல ஆகும் என்று கூறப்பட்டது. அதிக தொகையை செலுத்தியதால் BSNL நிறுவனம் மேலும் நட்டத்தில் செல்ல ஆரம்பித்தது.  

நமக்கே உரித்தான அலட்சியத்தால் அலைக்கற்றை அசைவற்று உறங்க ஆரம்பித்தது. எனவே நமது நிறுவனம் 2012ல் BWA அலைக்கற்றைக் கட்டணத்தை திருப்பித்தர கோரிக்கை விடுத்தது. 
ஆனால் பரமார்த்த குரு சீடர்களான நமது அதிகாரிகள் முன்யோசனை இன்றி புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி 2012ல் புதிய WIMAX இணைப்புக்களை கொடுக்க ஆரம்பித்தனர். 

23/08/2013 வரை  அதிகபட்சமாக கேரளத்தில் 22394  இணைப்புகளும்தமிழகத்தில்  15625 WIMAX இணைப்புகளும், 
154 கல்லூரிகளில் சுமார் 1000 இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. காரைக்குடி பகுதியில் புதிய, புதிய வாடகை கார்களை நியமித்து 
அவசரம் அவசரமாக இணைப்புக்கள் கொடுக்கப்பட்டன. 
இந்நிலையில் மந்திரிகள் குழு அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தர முடிவெடுத்துள்ளது. இதனால் அலைக்கற்றை வசதி திரும்ப பெறப்படும்.  எனவே  நமது நிர்வாகம்   மேற்கண்ட இணைப்புக்களுக்கு மாற்றாக  மாற்று தொழில் நுட்பம் ஏதும் பயன்படுத்த 
வாய்ப்பு உள்ளதா?.. என கேட்க ஆரம்பித்துள்ளது. 

நமது கவலை  இதுதான் ..
அலைக்கற்றை கட்டணம் திரும்ப கிடைக்கலாம்..
தமிழகத்தில் உள்ள  15000 வாடிக்கையாளர்கள் நிலை என்ன?..
கேரளத்தில் உள்ள 22000 வாடிக்கையாளர்கள் கதி  என்ன?..

"எண்ணித்துணிக கருமம்"  என்றார் வள்ளுவர்....
"துணிந்த பின் நிர்வாகம் எண்ணுவதை"   எண்ணி 
கர்மம்.. கர்மம்.. என்று 
தலையில் அடித்துக்கொள்வதை தவிர நமக்கு வேறு வழியில்லை..

N. பாலமுருகன், TTA, 
NFTE கிளைச்செயலர், தேவகோட்டை. 
ஜுனாகட்  
மத்திய செயற்குழு முடிவுகள்

மத்திய சங்க செயற்குழு குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் 
செப் 24/25 தேதிகளில் சிறப்புற நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய கூட்டாலோசணைக்குழு 4வது உறுப்பினராக ஜார்க்கண்ட் மாநிலச்செயலர்  தோழர்.மகாவீ ர் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நமது வாழ்த்துக்கள். 

கீழ்க்கண்ட கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
-:கோரிக்கைகள்:-

புதிய போனஸ் கணக்கீடு உருவாக்கப்பட வேண்டும். 
இந்த ஆண்டு குறைந்த பட்ச போனசாவது வழங்கப்பட வேண்டும்.

STAGNATION - தேக்க நிலை அகற்றப்பட வேண்டும்.

LTC மற்றும் மருத்துவப்படிகளை மறுபடியும் வழங்க வேண்டும்.

01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும். HRA 78.2 சத அடிப்படையிலேயே  வழங்க வேண்டும். 01/01/2007ல் இருந்து 78.2க்கான நிலுவை வழங்க வேண்டும்..

பிரதி மாதம் 12க்குள் GPF பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

கருணை அடிப்படை வேலைக்கான 55 மதிப்பெண் முறை அகற்றப்பட வேண்டும். விரைந்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.

JAO/JTO/TTA/கேடர்களில் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் வேண்டும்.
JTO ஆக OFFICIATING  செய்யும் TTAக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்..

மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் 
ALLOWANCES வழங்கப்பட வேண்டும்..

TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

நாலுகட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
SC/ST தோழர்களுக்கான  சலுகைகள் வழங்கப்பட வேண்டும். 
NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 
அக்டோபர் 2வது வாரம் 
ஆர்ப்பாட்டம் 
பொதுச்செயலர் மற்றும் மாநிலச்செயலர்கள் பங்கு கொள்ளும் 
உண்ணாவிரதம்.
தோழர்களே.. தயாராவீ ர்..

Wednesday 25 September 2013

7வது ஊதியக்குழு

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு அமைக்க பிரதம மந்திரி ஒப்புதல் அளித்துள்ளதாக 
நிதியமைச்சர் திரு.சிதம்பரம் அறிவித்துள்ளார். 

இரண்டு வருட இடைவேளையில் 
ஊதியக்குழு தனது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

 7வது ஊதியக்குழு 01/01/2016ல் இருந்து அமுல்படுத்தப்படும். 
ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனம் விரைவில் அரசால் அறிவிக்கப்படும். 

இராணுவ வீரர்களுக்கு இம்முறை தனியாக 
ஊதியக்குழு அமைக்கப்படுகின்றது. 
இது அவர்களது நீண்ட நாள் கோரிக்கையாகும். 
இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து முதன் முறையாக   இராணுவ வீரர்களுக்கு தனி ஊதியக்குழு அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

அது சரி.. நமக்கு எப்போது  ஊதியக்குழு?
 என்று நீங்கள் கேட்பது புரிகின்றது..

நிறுவனம் நன்றாக இருந்தால் ஊதியக்குழு 2017ல்தான்..
நலிந்து விட்டால்... 111...தான்..

Tuesday 24 September 2013

செப் - 25 
மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவல் 

கோரிக்கைகள்:
மத்திய அரசே...
  • ஒப்பந்த ஊழியருக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/= கூலி  வழங்கு
  • அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதிப்படுத்து..
  • தொழிலாளர் நலசட்டங்களை  அமுல்படுத்து..
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து..
  • பங்கு விற்பனையை நிறுத்து..
  • EPF/ESI திட்டங்களை முறைப்படுத்து..
BSNLEU - NFTE
இணைந்த ஆர்ப்பாட்டம் 

25/09/2013 புதன்கிழமை - மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 

கூட்டுத்தலைமை: 
தோழர். பூமிநாதன் - BSNLEU மாவட்டச்செயலர்  
தோழர். மாரி - NFTE  மாவட்டச்செயலர்
  
சிறப்புரை : 
தோழர். சிவாஜி காந்தி 
AIYF இளைஞர் பெருமன்ற மாவட்டச்செயலர்  

DR. இரகுபதி 
விஞ்ஞானி(ஓய்வு) - CECRI

தோழர்களே... வாரீர்... 

Monday 23 September 2013

சென்னை SOCIETY செய்திகள் 

சென்னை சொசைட்டிக்கு சொந்தமான 
90 ஏக்கர் நிலம் குலுக்கல் முறையில் நமக்கு கிடைக்கும் 
என ஆவலோடு கலர் கலரான  ஒப்புகை சீட்டை  
உறுப்பினர்கள் பத்திரமாக வைத்திருந்தனர். 

ஒப்புகை சீட்டு வெறும் ஒப்புக்கு கொடுக்கப்பட்ட சீட்டு என்பது  20/09/2013 அன்று நடைபெற்ற RGB கூட்டத்தில் கலந்து கொண்டபின்புதான் புரிந்தது. மொத்தம் 176 RGB உறுப்பினர்கள். சென்னை 57 பேர் . 
தமிழகம் 119 பேர். இதில் சென்னையில் இருந்து  53 பேரும், தமிழகத்தில் இருந்து  103 பேரும் மொத்தம் 156 RGBக்கள்  கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்கத்திற்கு சம்பந்தமே இல்லாத பலரையும் பார்க்க முடிந்தது. 

காரைக்குடி சுந்தர்ராஜனாகிய நான் 
RGB என்ற முறையில் பேசிய போது 
ஏற்கனவே முடிவு செய்தபடி வீட்டு மனைகளை பிரித்தளிக்க வேண்டும். அடுக்கு மாடி என்பது அடுக்கடுக்கான ஊழலுக்கு வழி வகுக்கும் என்று கூறிய போது அரங்கம் அதை ஆர்ப்பரித்து ஏற்றுக்கொண்டது. 
உடனே என்னை அடிக்க சிலர் பாய்ந்தனர். 
அடுத்தடுத்து பேசியவர்களும் இதை வலியுறுத்தவே RGBக்களின் கருத்து தங்களின் திட்டத்திற்கு எதிராக போய்விடும் என்று புரிந்து கொண்டவர்கள் பெரும்பான்மை  RGBக்கள் கருத்தை கேட்காமல் இயக்குநர்கள் கூட்டத்தை கூட்டி 10 பேரில் 7 பேர் குடியிருப்பு கட்ட ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், 
3 பேர் மட்டுமே வீட்டு மனை பிரிப்புக்கு  ஆதரவாய் இருப்பதாகவும்  மிக அவசர அவசரமாக அறிவித்து விட்டு கூட்டத்தை முடித்து விட்டனர். 

ஏறத்தாழ 1300 கோடிக்கு வீடு கட்ட போவதாக கூறப்படுகின்றது. 
ஏற்கனவே பல ஊழல் வழக்குகளில் சம்பந்தம் உள்ள கட்டிட  காண்டிராக்டர் மூலம் வீடு கட்ட முயற்சிப்பதாக தெரிகின்றது. 
இதில் ஊழல் பண்ண அவசியமேயில்லை. 
1300 கோடியில் 10 சதம் அன்பளிப்பு/கமிஷன்  என்று சொன்னாலே 
130 கோடி கை மாறும்.  சிலர் வளம் பெறலாம். 
ஆனால் தங்கள் வாழ்வில் சம்பாதித்த பெரும் பகுதி பணத்தை 
சொசைட்டிக்கு வட்டியாக செலுத்திய ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு பட்டையோ  நாமமோ நிச்சயம்  போடப்படும்.

எனவே  சங்க வித்தியாசமில்லாமல் 
ஊழலுக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர வேண்டும்.
சாதாரண ஊழியன் வட்டியாக கட்டிய பணம் 
அவனுக்கே  கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும்.

இறுதியாக
சொசைட்டி பிரச்சினையில் 
பெரியோர்கள் சொன்ன 
சிவன் சொத்து குல நாசம் 
என்ற வரிகளே  நமது காதில் ஒலிக்கின்றது.

K. SUNDARRAJAN, STS
RGB, KARAIKUDI.

மத்திய செயற்குழு 
24/09/2013 & 25/09/2013
 ஜுனாகட்,  குஜராத் 

  • போனஸ், LTC
  • மருத்துவப்படி 
  • முறையான பதவி உயர்வு 
  • பரிவு அடிப்படை பணி 
  • BSNL நிதியாதாரம் 
  • மகளிருக்கு சிறப்பு சலுகைகள் 
  • ஒய்வு பெற்றோருக்கு 78.2 சத பலன் 
  • BSNL நேரடி ஊழியருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் 
  • RM/GR D ஊழியர் STAGNATION பிரச்சினை 
  • பயிற்சிக்கால தொகையை உயர்த்துதல் 
  • பயிற்சி முடித்த RM/GR D ஊழியரை TM ஆக்குதல் 
  • SC/ST காலியிடங்களை நிரப்புதல்
  • JTO ஆக  OFFICIATING செய்யும் TTAக்களை நிரந்தப்படுத்துதல்.
  • உடல் ஊனமுற்றோருக்கு சிறப்பு சலுகைகள் 
  • JAO/JTO தேர்வு எழுதியோருக்கு சிறப்பு மதிப்பெண்கள் 

போன்ற முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும்.
செயற்குழு சிறந்திட  நமது வாழ்த்துக்கள்..

Sunday 22 September 2013

78.2 சத IDA இணைப்பு 
ஓய்வூதியர்கள் சங்க போராட்டம் 

01/01/2007ல் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 
78.2 சத IDA இணைப்பை வழங்கக்கோரி 

இன்று - 23/09/2013 
AIBSNL PWA அமைப்பின் சார்பாக 

நாடு தழுவிய 
தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் 

காரைக்குடி GM அலுவலகம் முன்பாக 
காலை 10 மணிக்கு 
தர்ணா 

மூத்த குடிமக்களின் 
நியாயமான கோரிக்கைக்கு 
நாமும் குரல் கொடுப்போம்..
வாரீர்.. தோழர்களே..

Friday 20 September 2013

மாநில அளவிலான 
சிறந்த ஊழியர் விருது 
VISHIST SANCHAR SEVA PADAK 

தமிழ் மாநில அளவிலான 
சிறந்த ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான
 விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறும் ஊழியர்கள் 

1. B. மோகன் - TM - நீலகிரி 
2. M. எழுமலை - ஓட்டுனர் - வேலூர் 
3. R. நடேசன் - ஓட்டுனர் - சென்னை 
4. S. சதீஷ் சந்திரகுமார் - SR. TOA - நாகர்கோவில் 
5. G. இராஜலட்சுமி - STENO - சேலம் 
6. T. தணிகைவேலு - SS(O) - சென்னை 
7. M. முத்துராசு - TTA - கும்பகோணம் 
8. P. நீலமணி - TTA - கோவை 
9. S. அருண் வினுசங்கர் - TTA - திருச்சி 
10.A. அப்துல் நசீர் - RM - திருச்சி 
11.செய்யது மொய்னுதீன் - GR D  - சென்னை 

விருது பெறும் அதிகாரிகள் 

1. K. சரவணபவன் - SDE - பாண்டிச்சேரி 
2. R. மேக்ஸ்வெல் ஜெகநாதன் - SDE - திருநெல்வேலி 
3. R. இராஜாராமன் - SDE - சென்னை 
4. I.T . மூர்த்தி - DGM - மதுரை 
5. K. இராஜாமணி - AGM - சென்னை 

விருது பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...
முற்றுகைப்போர் 

காரைக்குடி துணைக்கோட்ட 
அலுவலகத்தில்
TM ஆகப்பணி  புரியும் 
தோழியர். ஜூலி 
அவர்களை 

சாதி சொல்லி இழிவு படுத்திய 
மனித நேய விரோதியை 
ஊர்மாற்றல் செய்யக்கோரி 
ஊழியர் குடியிருப்பை 
உடனே காலி செய்யக்கோரி 

01/10/2013 - செவ்வாய்க்கிழமை அன்று 
காரைக்குடி GM அலுவலகம் முன்பாக 
முற்றுகைப்போர் 

சாதி இழிவு சொல்லும் சண்டாளம் தடுப்போம்..
பெண்களுக்கு  பெரும் அரணாய் இருப்போம்..

Thursday 19 September 2013

நிலமென்னும் நல்லாள் நகும் 

இன்று 20/09/2013 நடைபெற உள்ள சென்னை கூட்டுறவு சங்க 
RGB கூட்டத்தில் நிலம் பிளக்கும் விவாதம் நடைபெறும். 
நிலத்தை பிரித்தளிப்பது என்ற முடிவினை எட்டி விட்டு  அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டு தற்போது அதில் குடியிருப்பு கட்டுவோம் என்று சொல்வது பச்சை ஊழலுக்கு பாதை வகுக்கும். 

கூட்டுறவு சங்கம்  என்பது சங்கங்களை தாண்டிய  கூட்டுக்கொள்ளையின் அடையாளமாக ஆகிவிட்டது. நமது சென்னை கூட்டுறவு சங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஊழியர்களின் பெரும்பகுதி சம்பளத்தை கூட்டுறவு சங்கமே விழுங்குகின்றது. அந்த கூட்டுறவு சங்கத்தை விழுங்க பல சக்திகள், சகதிகள் வாய் பிளக்க ஆரம்பித்து விட்டன. 
வழக்கம் போல் ஜால்ரா சத்தங்களும் பெரிதாக கேட்க தொடங்கியுள்ளது. 
பொறுப்பில் இருப்பவர்கள்... 
தங்கள் இருப்பை விரிவு படுத்தும்  முயற்சியில் இறங்கி விட்டனர்.  
பெயரில் வீரமும் செயலில் சோரமும் என்பது இவர்களுக்கே பொருந்தும். 

இந்நிலையில் கூட்டுறவு சங்க பிரச்சினையில்
இதுவரை தலையிடாக்கொள்கையை கடைப்பிடித்து வந்த 
நமது மாநிலச்சங்கம் இம்முறை  அவ்வாறு இருக்காமல்  
தலையிட துவங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
மாநிலச்சங்கம்  தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
ஊழலுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும். 
உறுப்பினர்களுக்கு கிடைக்க வேண்டியதை பெற்றுத்தர 
பெருமுயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.

Tuesday 17 September 2013

கடன் பட்டார் நெஞ்சம்

பாரத வங்கியுடன் BSNL ஊழியர்களுக்கு கடன் வழங்குவதற்கான
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்ற செய்தியைப் படித்தவுடன் மனதில் பல்வேறு கவலைப்படிவங்கள் தோன்றிவிட்டன.

நேற்றிருந்தார் இன்று இல்லை..
இன்றிருப்பார் நாளை இல்லை..
என உலக நிலையாமையை பெரியோர் படம் பிடிப்பர்.

நிரந்தரமற்ற உலகில் நமது நிகழ்ச்சி நிரலில்
அஞ்சலிக்கு  நிரந்தர இடம் எப்போதும் உண்டு.
பல தோழர்கள் பணியில் இருக்கும்போதே
உடல் நலிந்து உயிர் துறக்கின்றனர்.
சிலர் சோமபான சுரபான வசப்பட்டு
இறுதியில் எமதர்மன் வசம் படுகின்றனர்.

பிரச்சினை என்னவெனில்
வாழ்வை பாதியிலே முடித்துகொள்ளும் பல தோழர்கள்
முழு கடனாளியாகவே மறைந்து விடுகின்றனர்.
வங்கியில் கடன்    
சொசைட்டியில் கடன்    
இலாக்காவில் பல்வேறு கடன் என கடன்காரன்களாகவே  
இவர்களது  வாழ்வு இங்கு முடிந்து விடுகின்றது.

தோழர். ஜேசுதாஸ் TM ஆக 
காரைக்குடி GM அலுவலகத்தில் பணி புரிந்தான்.
சொந்தமாக வீட்டை எழுப்பினான்.  வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவருக்குப்பதிலாக கடன் சுவரையே கட்டினான்.
கடன்காரர்கள் காலமெல்லாம் அவனை துரத்தினார்கள்.
கடைசியில் காலன் கையில்  அவன் மாட்டிக்கொண்டான்.

மறைந்த தோழர். ஜேசுதாசுக்கு கல்லூரியில் படிக்கும் 2 பெண் பிள்ளைகள்.
இலாக்காவில் கடன் வாங்கி கட்டிய வீடு. இன்னும் 2 லட்சம் பாக்கி.
சென்னை சொசைட்டியில் 4 லட்சம் கடன்..
வங்கியில் 3 லட்சம்  கடன்...
கந்து வட்டிகாரர்களிடம் ஏறத்தாழ 4 லட்சம் கடன்..
குடும்ப  ஓய்வூதிய பலன்கள் 
அனைத்தையும் கொடுத்தாலும் கூட கடன் அடைபடாத சூழல்..

இங்குதான் நமது கோரிக்கை எழுகின்றது..
வங்கியில் 50 ஆயிரத்துக்கு மேல் கடன் பெறுவோர் INSURANCE காப்பீடு செய்ய வழிவகை உண்டு. கடன் பெற்றவர் இறந்து விட்டால் காப்பீட்டுத்தொகையிலிருந்து அவரது கடன் பட்டுவாடா செய்யப்படும். ஏறத்தாழ ஒருலட்ச ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவிலேயே காப்பீட்டு தொகை உள்ளது. வங்கிகளுடன் புரிந்துணர்வு போடும்போது கட்டாயமாக காப்பீட்டையும் செய்து விட்டால் ஊழியர்கள் அகால மரணமடையும் போது வங்கிக்கடன் எளிதாக அடைபட்டு விடும். ஆனால் நாம் இந்த காப்பீட்டை செய்வதில்லை என்பதுதான் வருத்தமான செய்தி.

தற்போது 
அதிகாரிகளுக்கு 3 லட்சம், 
தொழிலாளருக்கு 1 லட்சம் என்ற அளவில் 
LIC மூலம் காப்பீட்டு திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இன்றைய நிலையில் சராசரியாக மொத்த சம்பளம் 30 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது. வெறும் 105 ரூபாய் பிடித்தம் செய்து ஒரு லட்சம் காப்பீடு தருவதை விட 315 ரூபாய் பிடித்தம் செய்து ஊழியருக்கும் 3 லட்சம் இழப்பீடு தரலாம். மொத்த சம்பளத்தில் ஒரு சதம் காப்பீட்டு தொகையாக தாரளமாக ஊழியர்கள் செலுத்தலாம்.

சென்னை கூட்டுறவு சங்கத்தில் 
தற்போது 4 லட்சம் கடனும் அதற்கு 3 லட்சம் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது. மற்ற சொசைட்டிகளில் இது குறைவு.
கூட்டுறவு சங்கங்கள் தாங்கள் வழங்கும் கடன் தொகைக்கு ஏற்ப காப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் கடன் தொகை காப்பீட்டு தொகையிலேயே சரிசெய்யப்படும்.

நமது இலாக்காவில் தற்போது வீட்டுக்கடன் வழங்குவதில்லை. 
ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியோர் இறந்து விட்டால் அவர்களது ஓய்வூதிய பலனிலேயே கடன் பிடித்தம் செய்யப்படுகின்றது. இறுதியில் கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி என்ற கதையாய் 
இறந்தவன் குடும்பத்திற்கு கையில் ஏதும் கிடைக்காது.. 
இலாக்கா வீட்டு கடனுக்காக காப்பீடு செய்திருந்தால் அந்த கடனும் அடைபட ஏதுவாகும். 

வங்கிக்கடனும் அடைபட்டு 
கூட்டுறவுக்கடனும் அடைபட்டு 
இலாக்கா கடனும் அடைபட்டால் தான் 
இறந்தவர் குடும்பம் கந்து வட்டியையும் 
அதன்பின் பிள்ளைகுட்டியையும்  கவனிக்க முடியும்..

மேலை நாடுகளில் உச்சி முதல் உள்ளங்கால் வரை காப்பீடு உண்டு. 
இங்கோ காப்பீட்டறிவு கம்மியாகவே உள்ளது.
ஒரு தொழிலாளி திடிரென மரணம் அடையும் போது அவன் பட்ட கடனை அடைப்பதற்கே அந்த குடும்பம் திண்டாடி போகின்றது.
எனவே நமது கோரிக்கை...
தொழிற்சங்க தலைவர்கள் 
காப்பீடு என்னும் அவசியத்தை  கணக்கில் எடுக்க வேண்டும். 
கடனுக்கு புரிந்துணர்வு போடுவதற்கு முன் தோழர்களின் சூழ்நிலையை புரிந்து உணர்வுடன் செயல்பட வேண்டும். இறந்தவர்களின் குடும்பம் பொருளாதார இன்னலில் இருந்து மீள வகை செய்ய வேண்டும்...

அப்போதுதான் ஜேசுதாஸ் போன்ற தோழர்களின் ஆன்மா அமைதியடையும்.

Monday 16 September 2013

நிறை கெட்ட நிர்வாகம்

சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்  மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
என்பது வள்ளுவர் வாக்கு.

ஆனால் காரைக்குடி மாவட்ட நிர்வாகம்
மகளிரின் நிறை காக்கத்தவறிய
நிறைகெட்ட நிர்வாகமாக
நீதியற்ற நிர்வாகமாக மாறிவிட்டது.

காரைக்குடி துணைக்கோட்ட அலுவலகத்தில் TM ஆகப்பணிபுரியும் 
தோழியர். ஜூலி உடன் பணி புரியும் ஒரு தரங்கெட்ட மனிதனால்
சாதிய ரீதியாக கேவலப்படுத்தப்பட்டார். 
பெண்ணென்றும் பாராமல் வசைமாரி பொழியப்பட்டார். 
ஊழியர் குடியிருப்பில் ஒவ்வொரு நாளும் அவமானப்படுத்தபட்டார். இருவரும் FNTO சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 
ஏனையோர் தலையிட முடியவில்லை. 
இறுதியில் தோழியர். ஜூலி அலுவலகத்தில் பணியில் இருந்த போது 
மிக வக்கிரமமான வார்த்தைகளால்  அந்தக்கயவாளியால் அவமானப்படுத்தப்பட்டார்.  
இம்முறை பொறுப்பதற்கில்லை என்று நாம் உடன் தலையிட்டு தறிகெட்ட அந்த தறுதலையை தற்காலிகப்பணிநீக்கம்  செய்ய வைத்தோம்.

தோழியர். ஜூலிக்கு நியாயம் வழங்க வேண்டிய காரைக்குடி மாவட்ட நிர்வாகம் தற்போது அந்தக்கயவாளிக்கு துணை போக ஆரம்பித்துள்ளது.

காரைக்குடி மாவட்டப் பொதுமேலாளர் உயர் வகுப்பை சேர்ந்தவர்..
அவருக்கு கீழ் பணி புரிவோர் ஊழல் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இணைந்து 
தவறு செய்தவனைத்  தடவிக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தோழியர். ஜூலியை அவமானப்படுத்தியவன் மீது 
உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்க வேண்டும்..
காரைக்குடியை விட்டு இடமாற்றம் செய்ய வேண்டும்..
ஊழியர் குடியிருப்பை விட்டு காலி செய்திட வேண்டும்..
இல்லையேல்.. 
உரிய அமைப்புக்கள் மூலம் .. 
உரிய போராட்டங்கள் மூலம்..  
பாதிக்கப்பட்ட தோழியருக்கு நியாயம் கிடைத்திட 
போராடுவோம்..
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்தின் 
மேல்தட்டு அதிகாரத்தனத்தை தகர்த்திடுவோம்..
செப் -17
பகுத்தறிவித்த பகலவன் 
தந்தை பெரியார் 
பிறந்த நாள் 

பெரியார் பிறந்தார்...
குனிந்த முதுகு  நிமிர்ந்தது..
பெரியார் பிறந்தார் ..
இடுப்புத்துண்டு முண்டாசானது..
பெரியார் பிறந்தார் ..
குப்பன் ஆனான்.. பெரிய அப்பனாக.. 
பெரியார் பிறந்தார்.. 
கரித்துண்டு ஒளி வீசியது...
பெரியார் பிறந்தார்.. 
சிறியோரெல்லாம் பெரியோர் ஆனார்..
சிறுமையைப் பெருமையாக்கிய 
பெரியாரைப் போற்றுவோம்..

Thursday 12 September 2013

மந்திரிகள் குழு முடிவுகள் 

12/09/2013 அன்று BSNL/MTNL மறுசீரமைப்புக்காக கூடிய 
மந்திரிகள் குழு கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.

BWA (Broadband Wireless Access) அலைக்கற்றை கட்டணமாக  BSNL/MTNL  நிறுவனங்கள் செலுத்திய 11,000 கோடி தொகையைத்திருப்பி அளிப்பது.
இதில் BSNLன் பங்கு 6725 கோடியாகும். 
MTNL செலுத்தியது 5700 கோடியாகும்.

MTNL ஊழியர்களுக்கு ஒய்வூதியம் அளிப்பது. 
  இதற்கான ஆண்டு ஓய்வூதியச்செலவு  570 கோடியாகும். இதில் 170 கோடியை MTNL செலுத்தும். மீதியை அரசே ஏற்றுக்கொள்ளும். 

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பின்பு மேற்கண்டவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும்,  மேலே கண்ட முடிவுகள் மூலம் BSNL/MTNL நிறுவனங்கள் லாபம் நோக்கி செல்ல முடியும் எனவும்  இலாக்கா அமைச்சர் கூறியுள்ளார். 

மேற்கண்ட  பிரச்சினைகள் தவிர 
விருப்ப ஓய்வு, BSNL/MTNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்குதல், அரசுத்துறைகள்  BSNL/MTNL சேவையை பயன்படுத்துதல், 
DOT சொத்துக்களை BSNLக்கு மாற்றுதல் 
போன்ற  முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை. 

Wednesday 11 September 2013

BSNL MTNL மறுசீரமைப்பு பற்றி கபில்சிபலுக்கு 
தோழர். குருதாஸ்தாஸ் குப்தா கடிதம் 

நலிந்து வரும் BSNL MTNL நிறுவனங்களின் மறுசீரமைப்பு பற்றி 
AITUC அகில இந்திய பொதுச்செயலர் தோழர். குருதாஸ்தாஸ் குப்தா இலாக்கா அமைச்சர் கபில்சிபலுக்கு பின்வரும் பிரச்சினைகளை தொழிற்சங்கங்களோடு கலந்து பேசி உரிய 
நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். 

பிரச்சினைகள் 

1.  BSNL உருவாக்கத்தின் போது அரசு அளித்த
    வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும்.
2. அலைக்கற்றை SPECTRUM இலவசமாக 
    BSNL/MTNLக்கு அளிக்கப்படவேண்டும்.
3. அலைக்கற்றை கட்டணமாக வசூலிக்கபட்ட 
     18500 கோடியை திருப்பி தரவேண்டும்.
4. மத்திய மாநில அரசுகள் மற்றும்   பொதுத்துறை   நிறுவனங்கள்
    BSNL/MTNL சேவையை பயன்படுத்த உத்திரவிட வேண்டும்.
5. 7500 கோடி கடனுக்கு BSNL செலுத்திய 
    12000 கோடி அநியாய வட்டியைத்திருப்பி தர வேண்டும்.
6. நிலம் மற்றும் கட்டிடங்களை அரசு 
    BSNLக்கு திருப்பி அளிக்க வேண்டும்.
7. வளர்ச்சிக்கு தேவையான கருவிகளை 
    உடனடியாக வாங்க வேண்டும்.
8. TELECOM FACTORYகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு
    அங்கிருந்தே கருவிகள் வாங்கப்படவேண்டும்.
9. விருப்ப ஓய்வு தடுக்கப்பட வேண்டும்.
10. நிறுவன நிர்வாகம் BSNL/MTNL 
     அதிகாரிகளிடமே இருக்க வேண்டும்.
11. பங்கு விற்பனை, தனியார்மயம் கூடாது.
12.தொலைதொடர்பில் அந்நிய மூலதனம் கூடாது.

தோழர். குப்தா பல்வேறு பிரச்சினைகளை எழுப்பியிருந்தாலும் கூட 12/09/2013 நடக்கவுள்ள மறுசீரமைப்பு கூட்டத்தில் விருப்ப ஓய்வு பரிசீலிக்கப்படும் என்றும் வெறும் நிதி உதவி அளித்து நிறுவனங்களின் நட்டத்தை சரி செய்ய இயலாது என்றும் அதிகாரிகள் கூறியதாக செய்திகள் கூறுகின்றன.

Tuesday 10 September 2013

BSNL/MTNL  சீரமைப்புக்குழு 

நிதியமைச்சர் திரு.ப. சிதம்பரம் தலைமையிலான BSNL/MTNL சீரமைப்புக்குழு 12/09/2013 அன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை 
BSNLலில் ஒருலட்சம் பேருக்கும் 
MTNLலில் 20ஆயிரம் பேருக்கும் விருப்ப ஒய்வு அளிப்பது 

MTNL ஓய்வூதிய சுமைக்காக 5925 கோடி நிதியுதவி பெறுவது 

2010ல் 4G சேவைக்காக தண்டமாக கட்டிய 
ஏறத்தாழ 23000 கோடி  BWA பணத்தை திரும்ப பெறுவது..

8900 கோடி நட்டத்தை சந்தித்துள்ள BSNL,
5000 கோடி நட்டத்தை சந்தித்துள்ள MTNL 
ஆகிய அரசு நிறுவனங்களை நட்டத்தில் இருந்து மீட்பது...

போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு முறையும் பல எதிர்பார்ப்புக்கள் நிலவுகின்றது. 
ஆயினும் உருப்படியான காரியங்கள் எதுவும் நடந்தபாடில்லை. 

மந்திரிகள் கூட்டம் நடக்கின்றது என்ற செய்தியை கேட்டு கேட்டு  
கவிஞர். மீராவின் 
கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் 
கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.

ஆனாலும் காத்திருப்போம்..
பெட்ரோல் டீசல் வெங்காயம் விலை இறங்கும்..
BSNL/MTNL நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன்..

Monday 9 September 2013

JCM  NATIONAL COUNCIL
தேசிய கூட்டாலோசனைக்குழு 

JCM தேசிய கூட்டாலோசனைக்குழு உருவாக்கத்திற்கான உத்திரவை 
BSNL நிர்வாகம் 09/09/2013 அன்று வெளியிட்டுள்ளது.
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

நேர்மைக்கும் திறமைக்கும் உதாரணமான நமது மாநிலச்செயலர்  
தோழர். பட்டாபி அவர்கள் NATIONAL JCMல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்வுக்கும் பெருமைக்கும் உரியது.

ஊழியர் பிரச்சினை தீர்வில், BSNL வளர்ச்சியில் 
தோழர். ஜெகன் வழியில் 
தமிழகப்பங்கை  பாங்கை உரிய முறையில் 
தோழர். பட்டாபி செலுத்திட மனமார வாழ்த்துகின்றோம்.

NATIONAL COUNCIL உறுப்பினர்கள் 

NFTE BSNL 
1. தோழர். இஸ்லாம் அகமது - அகில இந்திய தலைவர் - LEADER JCM 
2. தோழர். சந்தேஸ்வர்சிங் - பொதுச்செயலர் 
3. தோழர். பட்டாபிராமன் - தமிழ் மாநிலச்செயலர் 

BSNLEU 
1. தோழர்.அபிமன்யு - JCM SECRETARY
2. தோழர். நம்பூதிரி 
3. தோழர். அனிமேஷ் சந்திர மித்ரா - கல்கத்தா 
4. தோழர். ஸ்வபன் சக்கரவர்த்தி - திரிபுரா 
5. தோழர். குண்டன்னா - கர்நாடகா 

14 உறுப்பினர்களைக் கொண்ட JCMல் 
தற்போது 8 உறுப்பினர்களே நியமிக்கபட்டுள்ளனர்.

ஊழியர் வாழ்வு மேம்பட BSNL தழைத்திட  
JCM தன் பங்கினைச்செலுத்தி
செயல்பாட்டில் சிறந்திட நமது வாழ்த்துக்கள்..

Friday 6 September 2013

ஒரு COOL கொள்ளை 

தொலைபேசி நிலையங்களில் குளிர் சாதனப் பராமரிப்பிற்காக
(AC UNITS  AMC) மின்பிரிவிலிருந்து (ELECTRICAL WING )
அனுப்ப பட்டிருந்த கணக்கீட்டை கண்டவுடன்
கடுமையாக நமக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது.

வியர்வையின் காரணம்...
வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளியைச் சுரண்டும் சுரண்டல்தான்..

காரைக்குடி மாவட்டத்தில் 9 பெரிய தொலைபேசி நிலையங்களில் 
24 மணி நேர குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதன் பராமரிப்பு பணி மின்பிரிவுக்கு தரப்பட்டுள்ளது. 9 தொலை பேசி நிலையங்களிலும் 24 மணி நேர பணியில் SEMI SKILLED ஊழியர்கள்  நாளொன்றுக்கு 3 SHIFT வீதம் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கணக்கீடு தெரிவிக்கின்றது.

உதாரணமாக காரைக்குடி RSU தொலைபேசி நிலையத்திற்கு  
ரூ.23190/= மாதாந்திர பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. 
இதில் ரூ.3400/= AMC கட்டணமாகவும் 
ரூ.19790/= ஊழியர் சம்பளமாகவும் காட்டப்படுகின்றது.
உண்மையில் நடப்பது என்ன?
எல்லா 9 தொலைபேசி நிலையங்களிலும் 3 SHIFTலும் ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஏற்கனவே அங்குமிங்கும் ஒப்பந்த ஊழியர்களாக பணி புரியும் தோழர்களே இந்தப்பணிக்கும் பயன்படுத்தப்படுகின்றார்கள். பெரும்பகுதி பகலில் ஒருவரும் 
இரவில் ஒருவரும் பணியமர்த்தப்படுகின்றார்கள். 
கூலியாக அதிக பட்சம் 
மாதம் 1500 முதல் 2000 வரை மட்டுமே தரப்படுகின்றது. 
9 தொலைபேசி நிலையங்களிலும் மாதம் ரூ.1,78,110/
ஒப்பந்த ஊழியர் கூலியாக இலாக்காவிடம் இருந்து பெறப்பட்டு 
ஒப்பந்த ஊழியருக்கு மொத்தமாக மாதம் 30,000/= வரை மட்டுமே 
கூலியாக கொடுக்கப்படுகின்றது. 
காரைக்குடி மாவட்டத்தில் AC UNIT AMCக்காக ஆண்டிற்கு ஆகும் 
மொத்த செலவு  ஏறத்தாழ 27 லட்சம் ஆகும். 
இதில் அலுவலகங்களில் உள்ள AC UNIT செலவு தனி. 
இந்த 27 லட்சத்தில் ஏறத்தாழ ரூ. 22 லட்சம் 
ஊழியர் கூலியாக இலாக்காவிடம் இருந்து பெறப்பட்டு தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 3 லட்சம் வரை மட்டுமே கூலியாக தரப்பட்டு மிச்சம் கொள்ளை அடிக்கப்படுகின்றது.
மேலும் ஊழியர்களுக்கு EPF/ESI என்ற எந்த வசதியும் இல்லை. 
ஒப்பந்த ஊழியர்களும் விதியை நொந்து வெந்து கிடக்கின்றனர்.

குளிரூட்டும் பணியில் பணி செய்யும் தொழிலாளி வெந்து கிடக்கின்றான்.
ஒப்பந்தக்காரனும் பல லட்சம் சம்பளம் வாங்கும் அவலட்சணங்களும் 
அவனது கொதிக்கும்   வயிற்றில் அடித்து  
கூலாக தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். 

நாளுக்கு நாள் BSNL வருமானம் தேய்ந்து வருகின்றது. 
தமிழக CGM அனைவரிடமும் கருத்து கேட்டுள்ளார். 
வருமானத்தை பெருக்குவது ஒரு புறம் இருக்கட்டும். 
செலவுகளை சரி செய்வதே அதனினும் முக்கியம் ஆகும். 
வரவினும் பெரிது சிக்கனம் ஆகும். 
அதனினும் பெரிது ஊழலையும் ஓட்டைகளையும் அடைப்பது ஆகும்..
காரைக்குடி போன்ற சிறிய இடத்திலேயே ஆண்டிற்கு 20 லட்சம் 
அடிக்க முடியும் என்றால் தமிழகம் முழுவதும் தேசம் முழுவதும் எவ்வளவு கொள்ளை போகின்றது என்பதை நீங்களே கணக்கிடலாம்.

கர்நாடகா போன்ற மாநிலங்களில் 
ஒப்பந்த ஊழியர்கள் செய்யும் ON/OFF AC பராமரிப்பு பணியை 
நிரந்தர ஊழியர்கள் மற்றும் காவல் பணியில் உள்ளோர் செய்கின்றனர். 
செலவுகளை குறைக்கும் விதமாக 
தமிழ் மாநில நிர்வாகம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
மாநிலச்சங்கமும் ஒப்பந்த ஊழியர் சங்கங்களும்
இப்பிரச்சினையை கையில் எடுக்க வேண்டும். 
இதை சரி செய்ய வேண்டும்.. 
BSNL நிறுவனம் காத்திட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

Thursday 5 September 2013

RJCM
தமிழ் மாநில கூட்டாலோசனைக்குழு 
தமிழ் மாநில RJCM அமைப்பு உருவாக்கத்திற்கான உத்திரவு 05/09/2013 அன்று மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 
கீழ்க்கண்ட தோழர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் 

NFTE BSNL 

1. தோழர். பட்டாபி - தலைவர் 
2. தோழர். நூருல்லா - சேலம் 
3. தோழர். மதியழகன் - வேலூர் 
4. தோழர். முரளிதரன் - சென்னை 
5. தோழர். அழகுபாண்டியராஜா - மதுரை

BSNLEU 

1. தோழர். செல்லப்பா - செயலர் 
2. தோழர். மாரிமுத்து - கோவை 
3. தோழர். முருகையா - சென்னை 
4. தோழர். நாராயணசாமி - தர்மபுரி 
5. தோழர். கோபால் - சேலம் 
6. தோழியர். இந்திரா - நாகர்கோவில் 

நீதிமன்ற தலையீட்டின் காரணமாக BSNLEU 
 கூட்டணி சங்கங்களுக்கான 3 இடங்கள் நிரப்பப்படவில்லை.

BSNL உருவாக்கத்திற்குப்பின் முதன்முறையாக இரு செங்கொடி சங்கங்களும்  இணைந்து கூட்டாலோசனைக்குழுவில் பங்கு பெறுவது தொழிற்சங்க வரலாற்றில்  குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும். 

ஊழியர் பிரச்சினை தீர்வில் இருவரும் இணைந்து  
முத்திரை பதித்திட நமது வாழ்த்துக்கள்.

Tuesday 3 September 2013

அஞ்சலி 

ஒன்றுபட்ட காரைக்குடி விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் லைன்ஸ்டாப் மாவட்டச்செயலரும் 
நான்காம் பிரிவு சங்கத்தின் மாநிலப்பொருளராகப் பணிசெய்தவரும் 
அடிமட்ட ஊழியர்களின் அன்புக்குரியவருமான 

தோழர். இரகமத்துல்லா 

அவர்கள் 03/09/2013 அன்று 
உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

நமது நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
நல்லடக்கம் இன்று 04/09/2013 நடைபெறும்.

பணிவும் துணிவும், 
அன்பும் பண்பும்,
உழைப்பும் தியாகமும்  மிக்க 
மூத்த தலைமுறையை 
வணங்குவோம்.. அவர்தம்.. வழி நடப்போம்..  

Monday 2 September 2013

JTO தேர்வு முடிவுகள் 

TTA  தோழர்கள் எழுதிய JTO போட்டித்தேர்வு முடிவுகள் சென்னை வட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான  முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஊக்கத்தொகை நீட்டிப்பு 

PROJECT VIJAY,UDAAN மற்றும் EB ஆகிய விற்பனை பிரிவுகளில் 
பணி புரியும் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை
 01/04/2013ல் இருந்து 31/03/2014 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

MTNL ஓய்வூதியம் 

அரசு ஓய்வூதியத்தை அடைவதற்காக MTNL  ஊழியர் சங்கங்கள் 
BSNLக்கு இணையான சம்பளம் பெற சம்மதித்து
 நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளன.

7வது ஊதியக்குழு 

இரயில்வே ஊழியர்களின் கோரிக்கையான 7வது ஊதியக்குழு, 
3500 என்னும் போனஸ் உச்சவரம்பை நீக்குதல் மற்றும் DA இணைப்பு ஆகியவை நிதி அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளன. 
6வது ஊதியக்குழு  DA இணைப்பு என்பதை மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிந்துரை செய்யாததால்   நிதி அமைச்சகம்  இதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என தெரிகின்றது.

Sunday 1 September 2013

TTA  பணியமர்வு 

TTA  பயிற்சி முடித்த 11 தோழர்கள்   
இன்று பணியிட உத்திரவு பெறவுள்ளனர்.

POST TRAINING MARKS - பயிற்சி வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 
பணி நியமனம் செய்யவேண்டும் என நாம் கோரிக்கை வைத்தோம். 
நிர்வாகமும்  FNTO சங்கமும் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட  வேண்டும் என்ற நிலை எடுத்தன.
BSNLEU சங்கமும் நாமும் சேர்ந்து நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தோம். மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கும் பிரச்சினையைக் கொண்டு சென்றோம்.
சூடான விவாதங்களுக்கு பிறகு  மாவட்ட நிர்வாகம் பயிற்சி வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் COUNSELING முறையில் பணி அமர்வு செய்யப்படும் என்று கூறியுள்ளது. 
TTA  காலியிடங்கள் BSNLEU மற்றும் நம்முடன் கூட்டாக  விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. மாநிலச்சங்கத்திற்கும் BSNLEU மாவட்ட  சங்கத்திற்கும் நமது நன்றிகள்.

புதிய கேடரில் புதிய இடங்களில் புதிய உணர்வுடன் 
தோழர்கள் பணி புரிந்து BSNLஐ வலுப்படுத்த வளப்படுத்த  வாழ்த்துகின்றோம்.