Wednesday 9 October 2013

பலே.. பாலமுருகன்..

தேவகோட்டை NFTE கிளைச்செயலர் தோழர்.பாலமுருகன்,TTA 
விருப்ப மாற்றலில் 09/10/2013 அன்று திருவாடானை
தொலைபேசி நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.

இதிலென்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்கலாம்..
தொடர்ந்து படித்தால் புரியும்..

சென்ற மாதம் நடைபெற்ற TTA பணி நியமனத்தில்
தோழர்.அண்ணாமலை, TMக்கு TTAவாக
திருவாடானை தொலைபேசி நிலையத்திற்கு உத்திரவு வழங்கப்பட்டது.
தோழர். அண்ணாமலை பணியில் சேர்ந்தபின்
திருவாடானையில் 6 ஆண்டுகளாக மாற்றலுக்கு காத்திருக்கும் தோழர்.முத்துகுமாரசாமி,TTA காரைக்குடிக்கும்,  
தோழர். மாதவன், TTA தேவகோட்டைக்கும், 
தோழர்.கார்த்திகேயன்,TTA காரைக்குடிக்கும் 
மாற்றலில் விடுவிக்கப்பட வேண்டும். 

ஆனால் தோழர். அண்ணாமலையின் புதல்வன் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் தொலைதூரத்தில் உள்ள திருவாடானைக்கு செல்ல இயலவில்லை. எனவே மீண்டும் TMஆக சென்று விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார். இந்த நிலையில் தோழர். பாலமுருகனிடம் இது பற்றி விவாதித்தோம். உடனடியாக எந்த தயக்கமும் இன்றி தோழர். அண்ணாமலைக்காக தான் திருவாடானை செல்ல தயார் என்றும் இதனால் அண்ணாமலை மட்டுமின்றி மாற்றலுக்காக காத்திருக்கும் மற்ற 3 TTAக்களும் பயன் பெறுவார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.  உடனடியாக நிர்வாகத்தை சந்தித்து திருவாடானைக்கு விருப்ப மாற்றல் கடிதம் கொடுத்தோம். தற்போது தோழர். அண்ணாமலையின் திருவாடானை மாற்றல் ரத்து செய்யப்பட்டு அருகில் உள்ள திருப்பத்தூரில் TTAவாக பணியில் சேர்ந்து விட்டார். மாற்றலுக்காக காத்திருந்த மற்ற 3 TTAக்களும் அவரவர் விருப்ப இடங்களுக்கு விடுக்கப்படுகின்றனர். 

மாற்றல் என்பது இன்று தொழிலாளியை மிகவும் ஆட்டிப்படைக்கும் பிரச்சினையாக உள்ளது. மேல்மாடி கீழ்மாடி மாற்றல்  கூட 
தொழிற்சங்க பிரச்சினையாக, மோதலாக மாறி விடுகின்றது. 
இந்த சூழலில் தனது தன்னலம் கருதாது 
4 பேருக்கு நல்லது நடந்தால் தான் ஒருவன் சிரமம் அடைந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்த 
தோழர். பாலமுருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் தோழர். அண்ணாமலை உள்ளிட்ட தோழர்கள் FNTO சங்கத்தை சேர்ந்தவர்கள். 
FNTO தோழர்களுக்காக தன்னலம் கருதாது 
மனித நேயத்துடன் செயல்பட்ட 
NFTE கிளைச்செயலர் பாலமுருகனின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம். 

அரிது.. அரிது.. மானிடராய் பிறத்தல் அரிது..
பிறந்த காளையும் கூன் குருடு செவிடு பேடு 
தன்னலம் நீக்கி.. 
தோழர். பாலமுருகன் போல் பிறத்தல் அரிது..

1 comment: