Wednesday, 24 August 2016

ஓய்வின்றி உழைக்கும்...
ஓய்வுகளுக்கு வாழ்த்துக்கள் 
AIBSNLPWA
மாநிலச்செயலர்
தோழர்.முத்தியாலு 

AIBSNLPWA
மாநில உதவிச்செயலர்
தோழர். நாகேஸ்வரன் 

கோவையில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்ற 
AIBSNLPWA  ஓய்வூதியர் நலச்சங்கத்தின் மாநில மாநாட்டில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
புதிய நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்கள்.

மாநிலத்தலைவர் : தோழர். இராமாராவ்
மாநிலச்செயலர் : தோழர்.முத்தியாலு 
மாநிலப்பொருளர் : தோழர்.கௌஸ் பாஷா

காரைக்குடி NFTE முன்னாள் மாவட்டச்செயலர் 
தோழர்.நாகேஸ்வரன் அவர்கள் 
மாநில உதவிச்செயலராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மிக நீண்ட தொழிற்சங்க அனுபவமும், 
மாறாத கொள்கைப்பிடிப்பும், 
நெஞ்சம் நிமிர்ந்த நேர்மையும், 
கேட்போர் தகைக்கும் நாநயமும்,
 மாசற்ற நாணயமும் கொண்டவர்
அருமைத்தோழர் நாகேஸ்வரன் அவர்கள்.
  
 தோழர்.ஜெகன் அவர்களுக்குப்பின்  
தமிழகத்தில் முழக்கங்கள் எழுப்புவதில் 
முத்திரை பதித்தவர் தோழர்.நாகேஸ்வரன். 

இத்தனை சிறப்புகள் இருந்தும் 
NFTE இயக்கத்தில் ஒரு முறை கூட 
மாநிலச்சங்கப் பொறுப்பிற்குஅவர் 
தேர்வு செய்யப்படாதது விந்தையான ஒன்று. 

ஆனால்  ஓய்வூதியர் சங்கம் அவருக்கு உரிய இடமளித்து அவரை மாநிலச்சங்க நிர்வாகியாகத் தேர்வு செய்தமைக்கு  காரைக்குடி மாவட்டச்சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.

Tuesday, 23 August 2016

கல்கத்தா...காலிகள்...
அடித்து உடைக்கப்பட்ட மேற்கு வங்க மாநில  BSNLEU சங்க அலுவலகம் 

கல்கத்தாவில் உள்ள  மேற்கு வங்க மாநில 
BSNLEU சங்க அலுவலகம் 19/08/2016 அன்று
 திரிணமுல் குண்டர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. 

கேடு கெட்ட இந்த காட்டுமிராண்டித்தனத்தை 
நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 
 ஆட்களை அடிப்பதாலோ... அலுவலகத்தை நொறுக்குவதாலோ..
ஒரு இயக்கத்தை யாரும் முடக்கி விட முடியாது. 
மாறாக அது முன்னிலும் வீறு கொண்டுதான் எழும். 
இதுதான் காலம் காலமாக நாம் காணும் வரலாறு. 

கல்கத்தா என்பது கோபம் கொண்ட  காளியின் இருப்பிடம்
தற்போது குரோதம் கொண்ட  காலிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது.
இந்தக் கோழைத்தனத்தை எதிர்த்து இன்று 24/08/2016 நாடு முழுவதும் BSNLEU  சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 

சக சங்கம் என்ற முறையில்.. சகோதரச்சங்கம் என்ற முறையில் 
நமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்துவது நமது கடமையாகும். 
காரைக்குடியில் இன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 
நாமும் பங்கு பெறுகிறோம்...

தொழிற்சங்கங்கள் தொண்டர்களால் வளர்க்கப்படுவது...
குண்டர்களால் அல்ல... 
தீ விபத்து...

நேற்று 23/08/2016 மதியம் இராமநாதபுரத்தில் 
மின்னல் தாக்கியதால் MBM  தொலைபேசி நிலையம்   
தீப்பற்றி எரிந்து கருவிகள் முற்றிலுமாக   சேதமாகின. 
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயணைத்தனர். 
நமது சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இடி... மின்னல் போன்ற இயற்கை நிகழ்வுகளை
  நம்மால் தடுத்து நிறுத்த இயலாது. 
அதே நேரம் பாதுகாப்பு வழிமுறைகள் உரிய
 கவனத்துடன் பின்பற்றப்படவில்லை என்பதுவும், 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அசட்டைத்தனமும் காரணம்  
என்பதுவும்   இராமநாதபுரம் தோழர்களின் வருத்தமாகும். 

ஒரு சிறிய மாவட்டத்தில் 
மிகப்பெரிய பொருள் இழப்பும்... 
வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது 
நமக்கு மிகப்பெரிய கவலையாகும். 

முன்னை இட்ட தீ முப்புரத்திலே...
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே..
என்ற பட்டினத்தாரின் பாடல் வரிகள்  போல்...
நமக்கு  உணவளிக்கும் அன்னை போன்ற 
இந்த நிறுவனத்தில் மூண்ட தீயை  
நம் அடிவயிற்றில் மூண்ட தீயாகவே உணர்கிறோம்.

வருங்காலங்களிலாவது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
 பின்பற்றப்பட வேண்டும் என்பதுவே நமது வேண்டுகோள்.

Monday, 22 August 2016

வாழ்த்துக்கள் 

78.2 உரிமையை  வென்ற... 
60:40 கொடுமையைக்கொன்ற..
 மூத்தோர்களின்... 
ஓய்வூதியத்தைக் காத்தோர்களின்..

AIBSNLPWA 
ஓய்வூதியர் நலச்சங்கத்தின்...
தமிழ் மாநில மாநாடு 

ஆகஸ்ட் - 23 & 24 - கோவை 

சீரோடும்...சிறப்போடும்..
  நடைபெற வாழ்த்துகிறோம்...
BSNL... பெருவிற்பனைத் திருவிழா 

காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம் 
ஆகஸ்ட்  - 24
50 இடங்களில்.. 
பெருவிற்பனைத் திருவிழா 

இலவச சிம்கள் 
இனிய சலுகைகள் 

 தரை வழித்தொலைபேசி  
வெறும் 49 ரூபாய் வாடகையில்...

துண்டிக்கப்பட்ட தொலைபேசி 
மறுப்பில்லாமல் மறுஇணைப்பு 
பொறுப்போடு குறைகள் தீர்ப்பு... 

விற்பனைத் திருவிழா..
வெற்றித்திருவிழாவாகட்டும்..
தோழர்களே...உரமுடன் செயல்படுவீர்... 

Sunday, 21 August 2016

ஆறிலே... ஒன்றும்... ஆயிரத்திலே.. ஒன்றும்..
பிரதமர் மோடிக்கு கைப்பந்து வீராங்கனை பூஜா  கடைசியாக எழுதிய கடிதம்


உலகில் ஆறில் ஒருவன் இந்தியன்...
ஒலிம்பிக்கில் ஆயிரத்தில் ஒருவன் இந்தியன்...

உலக மக்கள் தொகை 735 கோடி...
இந்திய மக்கள் தொகை 130 கோடி...

ஒலிம்பிக்கில் மொத்தப் பதக்கங்கள்  2102...
இந்தியா பெற்ற பதக்..கங்கள்  வெறும்  2...
கடைசி இலக்கத்தை எப்படியோ.. 
கணக்காய்ப் பெற்று விட்டோம்...

140 கோடிப் பேரைப்  பெற்றெடுத்த  சீனா பெற்றது 70...
130 கோடிப் பேரைப் பெற்றெடுத்த  இந்தியா பெற்றது 2..

2016 போனால் போகட்டும்...  
2020 ஒலிம்பிக்கில்... 
சத்தியமாக சீனாவை முந்திவிடுவோம்...
பதக்க வீரர்களாக அல்ல... பாலூட்டிகளாக...

சிந்துவிற்கும்... சாக்ஷிக்கும்  கோடிகள் குவிகிறது...
ஏதோ ஒரு கோடியில்... 
பஞ்சாபில் வாழ்ந்த கைப்பந்து வீராங்கனை.. 
பூஜா உடலில் வெள்ளைக்கோடி இறுதியாக வீழ்கிறது...

பூஜா தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை...
விடுதிக்கட்டணம் கட்ட முடியாமல் 
விடை பெற்றுச் சென்று விட்டார்...

இது கூஜாக்களின் தேசம்...
பூஜாக்களுக்கான தேசமல்ல...

தனது நிலை யாருக்கும் வேண்டாம் என...
பிரதமருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...
பூஜா எமனிடம் போய்ச் சேர்ந்து விட்டார்...

பெற்ற  இரண்டு பதக்கங்களை விட..
பிரிந்து விட்ட ஒரு உயிர்...
நம் நெஞ்சை வதைக்கிறது...

இந்த தேசம் வெற்றி பெற்றவனை மட்டுமே 
தலையில் வைத்துக் கூத்தாடும்...

திறமை இருந்தாலும்... நேர்மை இருந்தாலும்..
எளியவனைத்  தரையில் போட்டுப் பந்தாடும்...

அரசியல் விளையாட்டாகிப்போன தேசமிது...
விளையாட்டும் அரசியலாகிப்போன நாசமிது...

நேர்மையும்... திறமையும்.. என்று மதிக்கப்படுகிறதோ...
அன்றுதான் இந்த தேசத்தின் தலை நிமிரும்...
பாதகங்கள் அகலும்... பதக்கங்கள் குவியும்...
அதுவரை பூஜாக்கள் கதை தொடரும்...
நேர்மையின் இமயம்..
தோழர்.ஜீவா 

மதுரையிலே மாநாடு...
சிறப்பாக நடத்தி முடிக்கிறார் ஜீவா...
மறுநாள் தோழர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே 
மயங்கி விழுகிறார்... காரணம் பட்டினி...
தோழர்கள் மயக்கத்தைத் தெளிவிக்கின்றனர்...
அப்போது... மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நிற்கிறார்...
தன் அரைக்கால் சட்டைப்பையிலிருந்து...
பணத்தை எடுத்து பந்தல் போட்ட தோழரிடம் நீட்டுகிறார்... ஜீவா...

" இந்தப் பணத்தில் நீங்கள் சாப்பிட்டிருக்கலாமே?
பணத்தை வைத்துக்கொண்டே  பட்டினி கிடந்தது சரியா?
என தோழர்கள் கோபம் கலந்த பாசத்துடன் கேட்கின்றனர்...

"இது... என் பணம் அல்ல... கட்சியின் பணம்...
இது சாப்பிடுவதற்கு அல்ல... சரியான இடத்தில் சேர்ப்பதற்கு"...
என்று ஜீவா அமைதியாகச் சொல்கிறார்...

இதுதான் ஜீவா...

இன்றும் இயக்கங்கள் உள்ளன...
மாநாடுகளும் ஆடம்பரமாக  நடக்கின்றன...
தலைவர்களும் மயக்கத்திற்கு ஆளாகின்றனர்... 
ஆனால் பட்டினி மயக்கத்திற்கு அல்ல...

இன்று  ஜீவா...  இல்லை... 
தலைவர்களிடம்... 
நேர்மை என்னும் ஜீவன் இல்லை...

நேர்மையின் அகரமாய்...
நேர்மையின்  சிகரமாய்...
இன்றும்.. என்றும்.. 
நேர்மையாளர்கள் நெஞ்சில் வாழும்.. 
தோழர்  ஜீவாவின் புகழ் போற்றுவோம்.... 

ஆகஸ்ட்..21...
தோழர்.ஜீவா பிறந்த நாள்...